- செய்திகள்

ஒலிம்பிக் வீரர்களுடன் செல்பி எடுத்து மகிழ்வித்த தெண்டுல்கர்…

 

ஐதராபாத், ஆக.29-
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கின் விருப்பத்தை நிறைவேற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மேடை ஏறிவந்து அவரது குடும்பத்தாருடன் ’செல்பி’ எடுத்துதந்து மகிழ்வித்தார்.
பாராட்டு விழா

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த திபா கர்மாகர் ஆகியோருக்கு ஐதராபாத் நகரில் நேற்று மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் 3 வீராங்கனைகளும் மேடையில் அமரவைத்து கவுரவிக்கப்பட்டனர். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்தும் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டார். கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனை படைத்த சச்சின் தெண்டுல்கர் மற்றும் பல்வேறு விளையாட்டுத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
செல்பி எடுத்தார்

இந்த விழாவில், ஒலிம்பிக் வீராங்கனைகள் 3 பேருக்கும் விலை உயர்ந்த கார்கள் பரிசாக அளிக்கப்பட்டன. சச்சினின் பரம ரசிகையான சாக்‌ஷி மாலிக், இவ்விழாவில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த தெண்டுல்கருக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். என்னுடைய சகோதரராக நான் அன்பு வைத்துள்ள அவருடன் நானும் என் குடும்பத்தாரும் இணைந்து நின்று செல்பி எடுத்துகொள்ள சச்சின் அனுமதிக்க வேண்டும் என விழா மேடையில் இருந்த ஒலிபெருக்கியின் மூலம் சாக்‌ஷி மாலிக் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இதனையடுத்து, விழா மேடைக்கு வந்த சச்சின், சாக்‌ஷி மாலிக் மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து நின்று செல்பி எடுத்து கொண்டார். இதேபோல், பி.வி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த், திபா கர்மாகர் ஆகியோருடனும் செல்பிக்கு போஸ் தந்து அனைவரையும் அவர் மகிழ்வித்தார்.

Leave a Reply