- மாவட்டச்செய்திகள்

ஒற்றைக்கொம்பன் யானையை பிடிப்பதில் வனத்துறை திணறல்

ஒற்றை கொம்பன் யானை வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கடந்த 1½ மாதத்துக்கு முன்பு ஒற்றை கொம்பன் எனும் காட்டுயானை 3 பேரை அடித்துக்கொன்றது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திபிடிக்க முயன்றபோது அது கேரளா தப்பி விட்டது.தமிழக- கேரள வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர்.

நிலம்பூர் வனப்பகுதியில் இருந்து யானை கடந்த வாரம் மீண்டும் நீலகிரி மாவட்டம் சப்பந்தோடு குடியிருப்பு அருகே வந்தது.இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து ஒற்றை கொம்பன் யானையை உடனே பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உதவிவனப் பாதுகாவலர்கள் தினேஷ், ராஜேஷ் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காட்டுயானையை பிடிக்கும் பணியில் இறங்கினர்.

ஒரே பிரசவத்தில் பிறந்த விஜய், சுஜய் என்ற கும்கிகள் உள்ளபட பொம்மன், ஸ்ரீனிவாஸ், கலீம், முதுமலை ஆகிய 6 கும்கி வரவழைக்கப்பட்டன. மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர்களான சுகுமாறன், மனோகரன், ராஜேஷ்குமார் மற்றும் வன ஊழியர்கள் அடங்கிய குழு கடந்த 4 நாள்களாக தொடர்ந்து முயற்சி செய்தனர்.

இதனிடையே பிடிபடும் அபயாரணம் யானைகள் முகாமில் கற்பூர மரங்களை கொண்டு கரால் எனும் மரக்கூண்டு தயாரானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மயக்க ஊசி செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொம்பன் யானை மற்ற காட்டு யானைகளுடன் கலந்து விட்டது. வனத்துறையினர் கண்காணிக்காத இடங்களில் தனியாகவும், வனத்துறை நெருங்கும்போது காட்டுயானைகளுடன் சேர்ந்து கொள்கிறது. இதனால் யானையை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. புத்தி கூர்மையுள்ள இந்த யானை வனத்துறையினருக்கு சவால் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறது. இதனிடையே காட்டுயானையை உடனே பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் சேரம்பாடி பகுதியில் நடமாடி வந்த யானை காப்பிக்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இதனையடுத்து அங்கு வனத்துறையினர் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது பத்துலைன் என்ற பகுதிக்கு இடம் மாறிவிட்டது. இதனையடுத்துபத்துலைன் பகுதியில் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள சோலைக்காடுகள் இருக்கும் பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்தனர். மாலை நேரமாகிவிட்டதால் யானையை தேடும் பணி கைவிடப்பட்டது.

5-வது நாளாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி இன்று காலை தொடர்ந்தது. அடர்ந்த வனப்பகுதிக்கு யானை சென்றுவிட்டால் அது மீண்டும் கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது.கேரளா வனப்பகுதிக்கு சென்றுவிட்டால் அதனை பிடிக்க முடியாது. இதனால் மனித- யானை மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீலகிரி வனப்பகுதியிலேயே யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அட்டகாசம் செய்த மற்ற காட்டுயானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டிருக்கும். அதற்கு மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி முகாமில் அடைத்துவிடுவார்கள். ஆனால் ஒற்றை கொம்பன் யானை வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply