- செய்திகள், மாநிலச்செய்திகள்

ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்ட பயங்கர வெடிச்சத்தம்

கொல்லம், ஏப்.11-

ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய கோவில் வளாகத்தில் மக்களின் அலறல் குரலும், கோவிலைச் சுற்றி  கருகிய உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தது நெஞ்சை உருக்குவதாக இருந்து.

நிலம் அதிர்வது போல்

விபத்து நடந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் கிரிஜா என்ற பெண் கூறும்போது, ‘‘பயங்கர வெடிச்சத்தத்தால் நிலம் அதிர்வது போல் உணர்ந்தேன். இதுபோன்ற ஒரு விபத்தை இதுவரை நான் பார்த்தது இல்லை’’ என்றார்.

கோவிலில் வாண வேடிக்கை நடந்தபோது வெடித்த பட்டாசில் இருந்து கிளம்பிய தீப்பொறி பறந்து பட்டாசு குடோனில் விழுந்ததால் இந்த கோர வெடி மற்றும் தீ விபத்து ஏற்பட்டது.

பெரிய தீப்பந்து

கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வாண வேடிக்கையை பார்த்துக்கொண்டிருந்த டெலிவிஷன் பத்திரிகையாளர் லாலு என்பவர் கூறும்போது, ‘‘முதலில் ஒரு பெரிய தீப்பந்து மேலே சுழன்று எழுந்ததையும் அதைத் தொடர்ந்து காதைப் பிளக்கும் இடி முழக்கம் போன்ற சத்தமும் கேட்டதாக’‘ தெரிவித்தார்.

இருளில் முழ்கியது

விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் இருளில் மூழ்கியது. விடியற்காலை நேரத்தில் இருளில் எழுந்த மக்களின் அவலக்குரல், நெஞ்சை உறைய வைப்பதாக இருந்ததாகவும் லாலு கூறினார்.

‘‘விபத்து நடந்ததுமே நான் அந்த பகுதிக்கு விரைந்து சென்றேன். அப்போதே 15 பேருக்கு மேல் இறந்து விட்டனர். கருகிய உடல்களும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களும் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாகவும்’’ அவர் தெரிவித்தார்.

பறந்து விழுந்த கான்கிரீட் துண்டுகள்

வெடி விபத்தில் கட்டிடங்கள் நொறுங்கியதால், கட்டிடங்களின் கான்கிரீட் துண்டுகள் 500 மீட்டர் தூரம் வரை பறந்து சென்று விழுந்தன.

மோட்டார் சைக்கிளின் மீது அமர்ந்து வாண வேடிக்கையை ரசித்துக் கொண்டு இருந்த இரு இளைஞர்கள் கான்கிரீட் துண்டுகள் தாக்கியதில் உயிர் இழந்ததாக, பாலாஜி என்பவர் தெரிவித்தார்.

ஒரு மருந்துக் கடை உள்ளிட்ட பல கட்டிடங்கள் இந்த விபத்தில் சேதம் அடைந்ததாக அவர் கூறினார்.

கலெக்டரிடம் புகார்

கோவிலுக்கு அருகில் வசித்துவரும் 73 வயது பங்கஜாக்‌ஷியம்மா என்பவர், வாண வேடிக்கை நடத்துவதற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்து இருக்கிறார்.

அவர் கூறும்போது, ‘‘எங்கள் வீடு கோவிலுக்கு அருகே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின்போது எங்கள் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மிகவும் மோசமாக சேதம் அடைந்து இருப்பதாக’’வும் அவர் கூறினார்.

—-

Leave a Reply