- செய்திகள், தேசியச்செய்திகள்

ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி கடன் மோசடி வழக்கு விஜய் மல்லையாவுக்கு தேதி குறிப்பிடாத கைது வாரண்ட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மும்பை,  ஏப். 19:-

ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்று, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், ‘ பீர் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ’ விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத, தேதி குறிப்பிடாத கைது வாரண்ட்டை பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டது.

ரூ.9 ஆயிரம் கோடி

கிஷ்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால், மோசடியாளர் என வங்கிகளால் அறிவிக்கப்பட்டார். மாநிலங்களவை எம்.பி.யான மல்லையா, எம்.பி.களுக்கான சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி லண்டன் சென்று தலைமறைவானார்.

வெளிநாட்டில் சொத்து

இந்நிலையில் ஐ.டி.பி.ஐ வங்கியில் கிஷ்பிஷர் நிறுவனத்துக்காக ரூ.900 கோடி மல்லையா கடன் பெற்று இருந்தார். இந்த தொகையில் இருந்து ரூ.430 கோடியில் வெளிநாடுகளில் சொத்து வாங்க சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக விஜய் மல்லையாவுக்கு, 3 முறை அமலாக்கப்பிரிவு சார்பில் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு முடக்கி மத்தியஅரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.

மனு

இதற்கிடையே விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி பி.ஆர்.பாவகே தீர்ப்பை 18-ந்தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். அதன்படி, இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

சொத்து வாங்கவில்லை

அப்போது, கிங்பிஷர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய்,  ஐடிபிஐ வங்கிக்  கடனில்  வெளிநாடுகளில் சொத்து ஏதும் வாங்கவில்லை, ரூ.430 கோடிக்கு சொத்து வாங்கியதாக கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம் என்று வாதாடினார்.

இதற்கு அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹிதன் வெனங்கோக்கர் வாதிடுகையில், 3 முறை அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு விஜய் மல்லையா ஆஜராகவில்லை, ஆதலால், அவரை கைது செய்ய வாரண்ட் தேவை  என்று தெரிவித்தார்.

உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாவகே, விஜய் மல்லையாவை இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் கைது செய்யும் விதமாக தேதி குறிப்பிடாத, ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply