- செய்திகள்

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் வயது வரம்பை குறைக்க கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை, ஆக. 18-
ஐ.ஏ.எஸ்.தேர்வுக்கான வயது வரம்பை குறைக்கும் பரிந்துரையை ஏற்கக்கூடாது என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது தொடர்பாக, பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.
இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்), இந்திய காவல்பணி (ஐ.பி.எஸ்.) உள்ளிட்ட 24 வகை பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான குடிமைப்பணிகள் தேர்வில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை குறைக்க  வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர்நிலைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. இது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் தீய செயலுக்கு ஒப்பானது ஆகும்.
பாதிப்பு
தற்போது பொதுப்பிரிவினர் 32 வயது வரை இத்தேர்வில் பங்கேற்கலாம். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 வயது வரையிலும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்கள் 37 வயது வரையிலும் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதலாம். இதுபோதுமானதல்ல என்பதால் அதிகபட்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 35 வயதாகவும், மற்றவர்களுக்கு 40 வயதாகவும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துத் தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நியாயமான கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக, அதற்கு முற்றிலும் எதிரான பரிந்துரையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பரிசீலித்து வருவது முறையல்ல. இது கிராமப்புற, ஏழை மாணவர்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.
25 வயதைக்கடந்தவர்கள்
இப்போது பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு, மருத்துவப் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் தங்களின் படிப்பை முடித்த பிறகு தான் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்கும்போது  குறைந்தபட்சம் 25 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர். அதன்பின் அவர்கள் ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதினாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாது.
32-ல் இருந்து 35
கடந்த 2014 ஆம் ஆண்டு   ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்வாக சீர்திருத்த ஆணையப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டு,  அதிகபட்ச வயது 30-லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டது. இப்போதும் பாஸ்வான் குழு பரிந்துரைப்படி அதிகபட்ச வயதை குறைப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, பாஸ்வான் குழு பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு குடிமைப்பணித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயதை இப்போதுள்ள 32 வயதிலிருந்து 35 வயதாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply