BREAKING NEWS

ஐந்திணை காதல் ஒழுக்கங்கள் ~ ஔவை ந.அருள்

பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தை பாங்குடன் சிந்தைக்கினிய விருந்தாக சுவைத்து வருகிறோம். அவ்வகையில், திணைமொழி ஐம்பது மற்றும் கைந்நிலை ஆகியவற்றிலிருந்து ஒருசில பாடல்களை சுவைத்தின்பம் துய்ப்போம்.

 1. திணைமொழி ஐம்பது

அறிமுகவுரை

ஐந்திணைகளைப் பற்றிய ஐம்பது பாடல்களைக் கொண்டது இந்நூல்.  ஐந்திணைகளைப் பற்றிக் கூறும் பிற நூல்களைக் காட்டிலும் இந்நூலுக்குத் தனிச் சிறப்பு ஒன்றுண்டு.  ஐந்திணைகளையும் வரிசையாக அமைத்திருக்கும் முறை சிறந்ததாகும் என்பதே அஃது.

முதலாவது, குறிஞ்சித்திணை:  குறிஞ்சி நிலத்தில்தான் முதன் முதலாகத் தலைவனும் தலைவியும் சந்தித்துக் காதல் கொள்வர்.  மணம் புரிந்து கொள்வதென உறுதி மேற்கொள்வர்.

இரண்டாவது, பாலைத்திணை:  இத்திணை, தலைவன் தலைவியை விட்டுப் பிரிவது பற்றிப் பேசுவது.  தலைவன், மணம் புரிவதற்கு முன்போ, மணம் புரிந்த பின்போ பொருள் தேடப் பிரிவான்.  திருமணத்திற்கு முன்பே, தலைவன் தலைவியை அவள் பெற்றோர் அறியாமல் அழைத்துச் செல்வான்.

மூன்றாவது, முல்லைத்திணை:  தலைவன் பிரிந்து சென்றமையால், வரும் துன்பத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல்.  தன் உள்ளத்தில் எத்துணைத் துயரம் என்றாலும், அதை வெளிப்படுத்தாமல் அடக்கிக் கொண்டு, தலைவன் வருகையை எதிர்நோக்கியிருப்பாள்.

நான்காவது, மருதத்திணை:  இல்லறத்தில் ஈடுபட்டுள்ள தலைவன் தலைவி ஆகியோரிடையே நிகழும் ஊடல் பற்றியது.  எவ்வெக் காரணங்களால் ஊடல் தோன்றும் என்பது கூறப்படும்.

ஐந்தாவது, நெய்தல் திணை:  தலைவனின் பிரிவினை எண்ணித் தலைவி வருந்துதல்.  தலைவி, தன் துன்பத்தை வெளிப்படையாகக் கூறுவாள்.

ஐந்திணை ஒழுக்கங்களைச் சுருங்கக் கூறினால், கூடல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் எனலாம்.

இந்நூலை இயற்றியவர் கண்ணஞ்சேந்தனார்.  இவர் சாத்தந்தையாரின் மகனாவார்.

 1. குறிஞ்சி

புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்

புகைகொடுக்கப் பெற்ற புலவோர் – துகள்பொழியும்

வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா

யானை யுடைய கரம்.                      1

தோழி, இரவுக் குறிக்கண் வரும் தலைவனை நேர் கண்டு, ‘மணமுடைய சந்தன மரங்களை வெட்டியெறிந்து, நெருப்பு வைத்துப் புகையை வான் வழியே செலுத்த, அதைப் பெற்ற விண்ணோர், பூந்தாது போன்ற மழைத் துளிகளைச் சொரிவர்.  அத்தகைய மலை நாட்டுத் தலைவனே! நீ கடந்து வரும் வழியானது, யானைகள் உலவி வரும் இடமாகும்.  எனவே, இரவுக் காலத்தில் வரவேண்டாம்’ என்கிறாள்.  இதன் மூலம் விரைவில் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறாள்.

 

 1. பாலை

சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்

நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி !

முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)

ஆர்பொருள் வேட்கை அவர்.                 5

தோழி தலைவியிடம், ‘பிரிவுத் துயரை ஆற்றியிருப்பாயா?’ என்று கேட்டதற்குத் தலைவி, ‘என் மேனி பசலையுறம்படி நம்மீதுள்ள அன்பு நீங்கப் பெற்று, நிறைபொருள் ஈட்ட வேண்டும் என விரும்பிய நம் தலைவன், சிறிய புறாக்களுடன் சிறிய எழால் என்னும் பறவை சினந்து போர் செய்யும் பாலை நிலத்தில் தங்கி, நம்மை மறப்பாரோ?  மறக்கமாட்டார்.  அருள் செய்வார்.  ஆதலால், நான் ஆற்றியிருப்பேன்’ என்றாள்.

 

 1. முல்லை

(தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தியது)

சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிதோ

வெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்

தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து

இன்றையில் நாளை மிகும்.           3

 

தோழி தலைவியைப் பார்த்து, ‘செறிவான வளையல்களை அணிந்திருப்பவளே!  மேகம், கொடுஞ்சினத்துடன் இடியுடன் முழங்கிக் குளிர் கடலின் நீரைக் குடித்து, மேன் மேலும் பெருகி வருகின்றது.  கால் காலமோ வந்துவிட்டது.  உன்னை விரும்பிய தலைவர், இன்றேனும் நாளையேனும் வருவார்.  ஆகையினால், வருந்த வேண்டா.  தலைவனும், கார்காலம் வந்ததும் உறுதியாக வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளான்’ என்றாள்.

 

 1. மருதம்

(தோழி, வாயில் மறுத்தது)

கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!

உடைய இளநலம் உண்டாய் – கடைய

கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி

எதிர்நலம் ஏற்றுநின் றாய்.       3

‘நீர் வளமுடைய நொய்யலாற்று மருதநிலத் தலைவனே!  கீழ்மைக்குணம் கொண்டவரின் தொடர்பே போல, தலைவியின்பால் இளமையின்பத்தை அனுபவித்தாய்!  இன்றோ, கடைப்பட்டவராகியவரும், அழகிய மார்பகத்தை உடையவருமாகிய பரத்தையர் வாழ்விடத்தைச் சேர்ந்து, முரண்பட்ட தன்மையை ஏற்றுக் கொண்டுள்ளாய்!’ என்று, தோழி வாயில் மறுத்தாள்.

 

 1. நெய்தல்

(அல்லக் குறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது)

நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்

கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்

செய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்!

ஐயகொல் ஆன்றார் தொடர்பு.                1

தலைவன் குறிப்பிட்ட குறிகளனைத்தும் பொய்த்தமையால், தோழி கொள்ளும் மனப் படபடப்பு, இப்பாடலில் வெளிப்படுவதைக் காணலாம்.

‘ஆயிழையாய்! தாழை சூழ்ந்த நெய்தலங்கானலில், நம்மைக் கண்ட முதல்நாள் போலவானான் நம் தலைவன்.  அவன் செய்த குறிகளும் பொய்த்துப் போயின.  அவனுடைய தொடர்பும் ஐயத்திற்கிடமாய் நிலையாது போலும்!  உனது மனையின் புறத்தே அச் சேர்ப்பன் செய்த குறிகள் பலவும் பலமுறைகளாக பயனிலவாய்ப் போயின!  என வருந்தும் தோழியின் கூற்று, சிறைப்புறத்திலிருக்கும் தலைவனின் உள்ளத்தைப் பிணித்துப் பயனளிக்கும் தன்மையது.

 

 1. கைந்நிலை

அறிமுகவுரை

 

கைந்நிலை என்பதை, கை+நிலை என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.  கை என்ற சொல்லுக்கு, ஒழுக்கம் என்ற பொருளைக் கொள்ள வேண்டும்.  நிலை என்பது, நிற்றல் என்பதைக் குறிக்கும்.  அஃதாவது, ஒழுக்கத்தில் நிற்றல்.  ஐந்திணை ஒழுக்கத்தில் நிலைபெறுதல் என்று பொருள் கொள்வது பொருத்தமாகும்.

கைந்நிலை என்பது, திணையொன்றுக்குப் பன்னிரண்டு பாடல்களாக ஐந்திணைகளுக்கும் அறுபது பாடல்களைக் கொண்டது.  இந்நூல், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசை முறையில் அமைந்துள்ளது.  குறிஞ்சியில் 1, 8 ஆகிய இரண்டு பாடல்களும், பாலையில் 14 முதல் 17 மற்றும் 20 ஆகிய ஐந்து பாடல்களும், முல்லையில் முதலும் முடிவுமான பாடல்கள் இரண்டினைத் தவிர உள்ள பத்துப் பாடல்களும், மருதத்தில் இரண்டாம் பாடலும் ஆக மொத்தம் 18 பாடல்கள் சிதைந்துள்ளன.  எவ்வகையான சிதைவுமின்றி உள்ளவை, இறுதியாகிய நெய்தல்திணைப் பாடல்களே.

இந்நூலின் பாடல்களை இளம்பூரணார் முதலிய உரைகாரர் எடுத்தாண்டுள்ளனர்.  இந்நூலை இயற்றியவர், மறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்.  இவருடைய தந்தையாரின் பெயர் ‘காவிதியார்’ என்பதனால், அரசனால் ‘காவிதி’ என்னும் சிறப்பளிக்கப்பெற்றவராக இருக்கலாம்.

இந்நூற் பாடல்களும், பிற அகப்பொருள் நூற் பாடல்களையொத்த சிறப்புடையனவே.  அறுபது பாடல்களை உடைய இந்நூல், திணைமொழி ஐம்பதுக்குப் பின்னர்த் தோன்றியிருக்கலாம்.

 1. குறிஞ்சி

பொன்இணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன்

மின்னின் அனையவேல் ஏந்தி இரவினுள்

இன்னே வரும்கண்டாய் தோழி இடையாமத்து

என்னை இமைபொரு மாறு.           10

குறிஞ்சித்திணைத் தலைவிக்குத் தூக்கம் வரவில்லை.  மலையிலோ வேங்கை மரங்கள் மிக்கிருக்கும்.  அவை, பொன்னிறப் பூக்களைப் பூக்கும்.  தலைவனின் கைவேல், மின்னலென ஒளி வீசும்.  அதனால், இரவுப் பொழுதில் வந்ததால், அவ்வொளியில் பலருக்கும் தெரியும்.  அந்த நிலையில் தலைவி, எங்ஙனம் தூங்கவியலும்?  ‘என்னால் தூங்க இயலவில்லை.  கண்ணிமைகளோ, பொருந்த மறுக்கின்றன’ என்கிறாள் தலைவி.

 

 1. பாலை

சிலையொலி வெங்கணையார் சிந்தியா நெஞ்சில்

கொலைபுரி வில்லொடு கூற்றுபோல் ஓடும்

இலையொலி வெங்கானத்து இப்பருவம் சென்றார்

தொலைவிலர்கொல் தோழி நமர்.      11

‘ஆற்றாள்!’ எனக் கவன்ற தோழிக்கு, ‘ஆற்றுவல்!’ என்பது படச் சொல்லியது.  தலைவி, பாலையின் வெங்கானகத்தின் கொடுமையைச் சொல்கின்றாள்.  பாலை நிலத்தே தோன்றும் பானல் நீரை, நீரென்று நினைத்து மானானது அஞ்சியோடும்.  ஓமை மரத்தின் நிழலில், அதுவும் புள்ளிபட்ட நிழலில் யானைகளோ சென்றுறங்கும்.  ‘நம் தலைவர் சென்ற இடம், சேய்மை இலையோ தோழி?’ என்றாள் தலைவி.

 

 1. முல்லை

பிடவங் குருந்தொடு பிண்டி மலர

மடவமயில் கூவ மந்திமா கூரத்

தடமலர்க் கோதையாய் தங்கார் வருவர்

இடபமெனக் கொண்டு தாம்.           12

முல்லைத் திணையின் ‘பருவங்காட்டி வற்புறுத்தி ஆற்றுவித்தல்’ என்னும் துறையமைந்த இறுதிப் பாடல்.  ‘பிடவமென்னும் ஒருவகைச் செடி குருத்து விடவும், அசோகமரம் பூத்துக் குலுங்கவும், இளமயில்கள் அககவும், பெண் குரங்குகள் குளிரால் உடல் நடுங்கவும் கார்ப்பருவம் வந்துவிட்டது.  பெரிதாக மணம் வீசும் மலர்மாலையை அணிந்த நறுங்கூந்தலையுடைய தலைவியே! பிரிந்து சென்ற தலைவர், இனியும் சென்றவிடத்தில் தங்கமாட்டார்.  திரும்பி வர வேண்டிய இடமென எண்ணியவாறு, நம்மிடம் வந்து சேர்வார்’ என்றாள் தோழி.

 

 1. மருதம்

கயநீர்ப் பாய்ந்தோடும் காஞ்சிநல் ஊரன்

நயமே பலசொல்லி நாணினன் போன்றான்

பயமில் யாழ்ப்பாண பழுதாய கூறாது

எழுநீபோ நீடாது மற்று.         10

வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது.  ‘நீர் நிலையில் நாயானது பாய்ந்தோடி மகிழ்கின்ற நொய்யலாறு பாய்ந்து வளங்கொழிக்கம் மருத நிலத் தலைவன், நயவுரைகள் பலவும் சொல்லிச் சொல்லி மகிழ்வூட்டிச் சென்றவன்தான்.  இப்போதோ, வெட்கம் சிறிதும் இல்லாதவன் போலானான்.  அவன் பொருட்டாக வந்துள்ள அச்சமில்லாத பாணனே! பயனற்றவற்றைக் கூறாமல் எழுந்துவிடு!  இங்கு மேலும் காலத்தை நீட்டிக்காமல், நீ போய்விடு!  என்றாள் தலைவி.

 

 1. நெய்தல்

பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி

தென்னவன் கொற்கைக் குருகுஇரிய – மன்னரை

ஓடுபுறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோ

கூடல் அணைய வரவு.          12

தோழி, தலைவிக்குத் தலைவன் வரைவொடு புகுந்தமை சொல்லியது, வினைமுற்றி மீண்ட தலைமகன் வரவு அறியச் சொல்லியதூஉம் ஆம்.  தோழி தலைவியை நேர்ந்து, ‘பூங்கொடி போன்ற மெல்லியளே! தென்னவனாகிய பாண்டியனின் கொற்கைத் துறையின் நாரையானது அஞ்சியோட, அரசரை புறங்கண்டு ஓடச் செய்த, ஒளிவீசும் வெற்றிமாலை புனைந்துள்ள நம்முடைய தலைவனின் தேரானது, விரைந்தவாறு அண்மையில் வந்துவிட்டது.  அவனுடைய வரவானது, கூடி மகிழும் வரவாகும்.  எனவே, வினைமேல் தலைவன் சென்றிருந்தபோது மேனியில் படர்ந்திருந்த அழகிய பசலையானது தீர்ந்துவிட்டது’ என்று கூறினாள்.

– முனைவர் ந.அருள்,

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *