- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஐதராபாத்தில் மாணவர் தற்கொலை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

சென்னை, ஜன.20-
ஐதராபாத்தில் மாணவர் தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என இளங்கோவன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-
மாணவர் மோதல்
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பு மாணவர்களுக்கும், ரோகித் வெமுலா சார்ந்திருந்த அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ரோகித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய பா.ஜ.க. அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மூலமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி எடுத்த நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் மேற்குறிப்பிட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்தும், விடுதியிலிருந்தும் பலவந்தமாக வெளியேற்றினார்.
சி.பி.ஐ.விசாரணை

இந்த கொடுமையின் காரணமாக ரோகித் வெமுலா விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.

எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரும், துணைவேந்தரும் பதவியிலிருந்து விலக்கப்பட்டு மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) தலித் மாணவரின் தற்கொலை குறித்து விசாரிக்க வேண்டும்.
தலித் மக்களுக்கு எதிரான சட்டவிரோத அடக்குமுறைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். இத்தகைய அவலநிலையை போக்குவதற்கு சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே இன்றைய அவசியமாகும்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

Leave a Reply