- செய்திகள், வணிகம்

ஏற்றுமதி சரிவு கண்டுள்ளபோதிலும் வர்த்தக பற்றாக்குறை 763 கோடி டாலராக குறைந்தது

புதுடெல்லி, பிப்.17:-
ஏற்றுமதி சரிவு கண்டுள்ளபோதிலும் கடந்த ஜனவரி மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 763 கோடி டாலராக குறைந்துள்ளது.

ஏற்றுமதி வீழ்ச்சி
சரக்குகள் ஏற்றுமதி தொடர்ந்து 14-வது மாதமாக கடந்த ஜனவரியிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 13.6 சதவீதம் குறைந்து 2,100 கோடி டாலராக உள்ளது. பெட்ரோலியம், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். இதே மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 11 சதவீதம் வீழ்ந்து 2,871 கோடி டாலராக சரிந்துள்ளது. தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதே இதற்கு காரணம். அந்த மாதத்தில் 291 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம் வர்த்தக பற்றாக்குறை ஆகும். தொடர்ந்து 14-வது மாதமாக சென்ற மாதத்தில் ஏற்றுமதி சரிவு கண்டுள்ள போதிலும் வர்த்தக பற்றாக்குறை 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 763 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரிக்கவில்லை என்றால் வர்த்தக பற்றாக்குறை மேலும் குறைந்திருக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் வர்த்தக பற்றாக்குறை 685 கோடி டாலராக இருந்தது.

முதல் 10 மாதங்களில்
இந்த நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்-ஜனவரி) 21,767 கோடி டாலருக்கு சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 17.65 சதவீதம் குறைவாகும். அப்போது 26,432 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல்-ஜனவரி மாத காலத்தில் சரக்குகள் இறக்குமதி 15.46 சதவீதம் குறைந்து 32,452 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இதனையடுத்து  முதல் 10 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 10,680 கோடி டாலராக குறைந்துள்ளது.

Leave a Reply