- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஏர் இந்தியா மேலாளரை தாக்கிய வழக்கில் சென்னை விமான நிலையத்தில் எம்.பி. கைது

சென்னை, ஜன. 18-
ஏர் இந்தியா மேலாளரை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆந்திர எம்.பி., மிதுன் ரெட்டியை சென்னை விமான நிலையத்தில் சித்தூர் போலீசார் கைது செய்தனர்.
மோதல்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ‘ராஜம்பேட்’ தொகுதியின் எம்.பி., பி.மிதுன்ரெட்டி. இவர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கும்,  ஏர் இந்தியா மேலாளர் ராஜசேகருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதி திருப்பதி விமான நிலையத்தில் மோதல் ஏற்பட்டது. கால தாமதமாக வந்த மிதுன் ரெட்டி உறவினருக்கு, ‘போர்டிங்பாஸ்’ கொடுக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதுதான் இந்த மோதலுக்கு காரணமாக அமைந்தது.
இந்த மோதலின் போது ராஜசேகரை, மிதுன் ரெட்டி கன்னத்தில் அறைந்தாராம். இதையடுத்து எம்.பி., மீதும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் காவல்நிலையத்தில் ராஜசேகர் புகார் செய்தார். இதுகுறித்து 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 16 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். மிதுன் ரெட்டியின் நேர்முக உதவியாளர் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுவிட்டார்.
தள்ளுபடி
இந்த நிலையில் மிதுன் ரெட்டியும், மதுசூதனன் ரெட்டியும் தலைமறைவாகிவிட்டனர். ஆனால் போலீசார் மது சூதனன் ரெட்டியை விரட்டி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு ஆந்திர ஐகோர்ட் டில் மிதுன் ரெட்டி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் மிதுன் ரெட்டி வெளிநாடு சென்றுவிட்டார். இதையடுத்து ஆந்திர போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் மிதுன்ரெட்டி எம்.பியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் மிதுன்ரெட்டியை போலீசார் கைது செய்தனர். உடனடியாக அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து மிதுன் ரெட்டியை போலீசார் நெல்லூர் சிறையில் காவலில் வைத்தனர்.
பதற்றம்
மேலும் ராஜசேகரை, மிதுன் ரெட்டி தாக்கியது தொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ள தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள், மிதுன் ரெட்டி கைதை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply