- அரசியல் செய்திகள்

ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் அதிமுக கோரிக்கை

ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரு துணை ஆணையர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா மற்றும் 5 தேர்தல் அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

அவர்கள் தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. 2016-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பலர் வாக்களிக்க முடியாமல் போனது. அதனால் ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், வாக்குச்சாவடி அருகே வாக்காளர்களுக்கு பந்தல், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரியுள்ளோம்.

வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள பகுதி இருட்டாக இருப்பதால், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியவில்லை என புகார்கள் எழுவதால், வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு மேலே விளக்கு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் 80 வயது மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறைக்கும் அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply