- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வகுப்பறையில் தீ விபத்து மாணவர்கள் உயிர் தப்பினர்

செங்கல்பட்டு:பிப்.21-

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வகுப்பறையில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.
வகுப்பறையில் தீ
செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் உள்ள, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் உள்ள, டெக் பார்க் அடுக்குமாடி கட்டிடத்தின் 2–-வது மாடியில் உள்ள ஒரு வகுப்பறையின் கூரை (சீலிங்) பகுதியில், திடீர் என புகை வந்தது. பின்னர் சீலிங் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே பல்கலைக்கழக நிர்வாகிகள், மறைமலைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே, மறைமலைநகர், தாம்பரம் போன்ற பகுதிகளில் இருந்து 3 –க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.
தீயணைப்பு வீரர்கள், தீப்பிடித்த 2–வது மாடி பகுதியில், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் மற்ற வகுப்பறை கட்டிடங்களுக்கு, தீ பரவாமல் இருப்பதற்காக, தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் நடக்கும் போது, அந்த வகுப்பறையில் மாணவர்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply