- செய்திகள், தேசியச்செய்திகள்

‘எல் நினோ’ போய் ‘லா நினோ’ வருதாம் தென்மேற்கு பருவ மழை சூப்பரா இருக்குமாம் !

புதுடெல்லி, ஏப். 12:-

நாட்டில் இரு ஆண்டுகள் பற்றாக்குறை மழை இருந்துவரும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் தென் மேற்கு பருவ மழைபொழிவு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 2016-17-ம் ஆண்டு கரீப் பருவத்துக்கான விவசாயப் பணணிகளை தொடங்குவதற்கான தேசிய அளவிலான மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய வேளாண்மை செயலாளர் ஷோபனா கே பட்நாயக் கூறுகையில், “ எல் நினை பருவநிலை மாறுபாடு படிப்படியாக குறைந்து, இப்போது லா நினோ பருவநிலையின் தாக்கம் வரத்தொடங்கி இருக்கிறது. ஆதலால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவத்தில் சிறந்த மழைப்பொழிவு இருக்கும் என நம்புகிறோம்.

ஆதலால், மாநில அரசுகள் எதிர்வரும் பருவத்தையும், பருவமழையையும் கருத்தில் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளோம். குறிப்பாக நெல் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், போதுமான அளவு விதை இருப்பு, உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை இருப்பு வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக பற்றாக்குறையாக இருந்த பருவமழை விவசாயிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இப்போது நிலத்துக்கு அதிக அளவிலான நீர்ப்பிடிப்பு அவசியம்'' என்று அவர் தெரிவித்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக நீடித்த பற்றாக்குறை பருவமழையால் நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டது. கடந்த 2014-15-ம் ஆண்டில்(ஜூலை-ஜூன்பருவம்) 25.20 கோடி டன் உணவு தானிய உற்பத்தி இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில், 26.50 கோடி டன்னாக உயர்ந்திருந்தது.

நடப்பு 2015-16-ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14 சதவீதம் குறைந்து, 25.30 கோடி டன்னாக சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply