- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயலலிதா மரியாதை

சென்னை, ஜன. 18-

எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி எம்.ஜி.ஆர் பிறந்தாநாள் சிறப்பு மலரையும் ஜெயலலிதா வெளியிட்டார்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்

தமிழக முன்னாள் முதல்–-அமைச்சரும் அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்–-அமைச்சருமான ஜெயலலிதா, நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களும், மகளிர் அணியினரும் ‘புரட்சித் தலைவர் வாழ்க’, புரட்சித் தலைவி வாழ்க’ என்று முழக்கமிட்டு வரவேற்றனர். அவர்களது வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, பின்னர் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறந்தநாள் மலர்

பின்னர், எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்டார். இருதொகுதிகளாக உருவாக்கப்பட்ட சிறப்பு மலர்களின் முதல் தொகுப்பை அமைச்சர் வளர்மதியும், இரண்டாவது தொகுப்பை அமைச்சர் கோகுல இந்திராவும் பெற்றுகொண்டனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கிய ஜெயலலிதா பின்னர் அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு விவசாய பிரிவு மீனவர் பிரிவு மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

உச்சாக வரவேற்பு

முன்னதாக முதல்-–அமைச்சர் ஜெயலலிதா தலைமை கழகம் வருவதையொட்டி அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போயஸ் காடனில் இருந்து கட்சி அலுவலகம் உள்ள ராயப்பேட்டை வரை சாலையின் இருபுறங்களிளும் கட்சி கொடிகளை கட்டி இருந்தனர். ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக வரவேற்பு பேனர்கள் வைத்து இருந்தனர்.
மேலும், செண்டை மேளம், பேண்ட் வாத்தியம், முழங்க ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் பூரண கும்ப்ப மரியாதையும் அளித்து உச்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply