- செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்: கவர்னரை சந்திக்கும் திட்டம் இல்லை மு.க.ஸ்டாலின் பேட்டி…

சென்னை,ஆக.25-
கொளத்தூர் தொகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் கவர்னரை சந்திக்கும் திட்டம் இல்லை என்று கூறினார்.
கொளத்தூர் தொகுதியில்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் வசந்தம் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, அதன் அருகில் உள்ள நூலகம், பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் அங்குள்ள நூலகத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நூலக ஊழியர்கள் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறினர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற உறுப்பினராக..
கொளத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஆய்வு மேற்கொண்டேன். அதில் குறிப்பாக வசந்தா கார்டன் மெயின் தெருவில் 30 அடி நீளம் இருக்கக்கூடிய ரெயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் அருகாமையில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் சாலைக்கும், வீடுகளுக்கும் வருகிறது. எனவே, பல நோய்கள் பரவும் ஆபத்து உருவாகி இருக்கிறது. எனவே ரெயில்வே துறையினர் அந்த சுற்றுச்சுவரை உடனே கட்டித்தர வேண்டும். இது தொடர்பாக ரெயில்வே துறையிடம் நான் முறையிட இருக்கிறேன். மதுரைபிள்ளை தெருவில் இருக்கக்கூடிய நூலகம் பாழடைந்த நிலையில் இருக்கிறது. எனவே அதனை புதிதாக கட்டி, பராமரிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது.
பள்ளிக்கூட கட்டிடம்
அதேபோல மதுரை பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சாதாரண மழை வந்தாலே பள்ளிக்குள் நீர் புகுந்து விடுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் எடுத்து சொல்லி இருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி தந்திருக்கிறார்கள். அதேபோல இந்த தொகுதியில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் இருக்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க கிளை நூலகத்தை மேம்படுத்தி தர வேண்டும்.
நோய் பரவும் நிலை
மேலும் இப்பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு `டம்பிங்' ஏரியாவாக பயன்படுத்தப்படுவதால், பலவித நோய்கள் பரவும் நிலை உள்ளது. அதனை வேறு இடத்திற்கு மாற்றித்தர வேண்டும் என ஜவஹர் பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பெரியவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்தும் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் எடுத்து சொல்லி இருக்கின்றேன்.
கவர்னரை சந்திக்கும் திட்டம்
சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் தொடர்பாக கவர்னரை சந்திக்கும் திட்டம் இல்லை. அப்படி தேவைப்பட்டால் கவர்னரை சந்தித்து முறையிடுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply