- செய்திகள், மாவட்டச்செய்திகள்

"என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்" கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை 4 பேர் அதிரடி கைது…

அம்பத்தூர்,ஏப்.28-
என் சாவுக்கு இவர்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடிப் பழக்கம்
சென்னை அடுத்த அம்பத்தூர் அத்திப்பட்டு சின்ன காலனியைச் சேர்ந்தவர் ஜான்சன் (38). இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஜான்சனுக்கு குடிப் பழக்கம் உடையவர். இவர் கடந்த 25-ம் தேதி பெரிய காலனி பகுதியில் நடந்த  உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நண்பர் ராஜேசுடன் சென்றார். சென்ற இடத்தில் ஜான்சனை ராஜேஷ் கிண்டல் செய்ததாக தெரிகிறது.
மண்டை உடைப்பு
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இரவு வீடு திரும்பிய ராஜேஷ் உறவினர்களை அழைத்து வந்து ஜான்சன் வீட்டுக்கு சென்று தகறாரில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் கல்லை எடுத்து ராஜேசின் உறவினர் செல்வராஜின் மண்டையை உடைத்துவிட்டார். இதைப் பார்த்த உறவினர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். மீண்டும் வந்து தகராறில் ஈடுபடுவார்களோ என பயந்துபோன ஜான்சன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.
மருத்துவச் செலவு
அந்த நேரத்தில் போலீசார் ராஜேஷ், சதிஷ், ஜெபின்ஜான், செல்வராஜ் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்தனர்.  விசாரணையில் ஜான்சன்தான் செல்வராஜின் மண்டையை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவருடை மருத்து செலவிற்கு பணம் தருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு வந்த ஜான்சன் அதிக அளவில் மது அருந்திவிட்டு கடிதம் ஒன்றை எழுதினார். பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் வேப்பம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடிதம் சிக்கியது
சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து,  கடிதத்தை கைப்பற்றி பார்த்தபோது அதில், என் சாவுக்கு அந்த 4 பேர்தான் காரணம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பத்திற்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து ராஜேஷ், சதிஷ், ஜெபின்ஜான், செல்வராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply