- செய்திகள்

எனக்கு எவ்வளவு அவமானம் வந்தாலும் `அவையை சிறப்பாக நடத்துவேன்' தி.மு.க.வினரின் நடவடிக்கைகளை சுட்டிகாட்டி சபாநாயகர் பேச்சு…

சென்னை, ஜூலை.30-
"எனக்கு எவ்வளவு அவமானம் வந்தாலும் அவையை சிறப்பாக நடத்துவேன்" என்று. தி.மு.க. உறுப்பினர்களின் நடவடிக்கைகளை சுட்டிகாட்டி சபாநாயகர் தனபால் கூறினார்.
கண்டனம்
சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று வெளிநடப்பு செய்த பிறகு சபாநாயகர் ப.தனபால் பேசியதாவது:-
சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் இந்த அவையை பலமுறை நடத்த விடாமல் செய்துள்ளனர். தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் என்னை ஒருமையில் பேசினார். அதையும் பொறுத்துக் கொண்டேன். பொன்முடி என்னை ஏக வசனத்தில் பேசி இருக்கிறார். ரங்கநாதனும், அன்பழகனும் அநாகரீகமாக சைகை காட்டி கையை உயர்த்தி பேசுகிறார்கள். கேலியும், கிண்டலும் பேசுவதுமாக உள்ளனர். வன்மையாக கண்டிக்கும் அளவுக்கு அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
முதல்-அமைச்சர் அறிவுரை
ஆனால் நான் அனைத்தையும் பொறுமையாக சகித்து கொண்டு சபையை நேர்மையாக நடத்தி வருகிறேன். முதல்-அமைச்சர் சொன்ன அறிவுரையை ஏற்று தராசு முள்போல் நடு நிலையோடு நின்று சிரமேற்கொண்டு பணியாற்றி வருகிறேன்.
தி.மு.க. உறுப்பினர்கள் பலர் என்னை ஒருமையில் பேசுகிறார்கள். என்னை தனிப்பட்ட முறையில் மதிக்க வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் பேரவை தலைவர் என்ற வகையில் என்னை ஒருமையில் பேசுவது முறையற்றது. அம்மா கொடுத்த அறிவுரைப்படி சபையை சமமாக நடத்தி கொண்டிருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். சபையில் அமளி ஏற்படும் போது ஆளும் கட்சி உறுப்பினர்களை உட்காருங்கள் என்றால் உட்கார்ந்து விடுகிறார்கள்.
அவமானம்
ஆனால் எதிர்க்கட்சியினர் உட்காருவதில்லை. எதிர்க்கட்சி தலைவரும், துணை தலைவரும் அவர்கள் கட்சி உறுப்பினர்களை எழுந்து நிற்க தூண்டி விடுகிறார்கள். என்னை உதாசீனப்படுத்துவதுடன் சபையை இப்படித்தான் நடத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கிறார்கள். ஜனநாயக முறைப்படி நடத்த விடாமல் என்னை நிர்ப்பந்திக்கிறார்கள். இன்றே தீர்ப்பு சொல்ல வலியுறுத்தி வெளிநடப்பும் செய்துள்ளார்கள்.
அவையை சிறப்பாக நடத்துவேன்
தொடர்ந்து அவர்கள் சபையை நடத்த ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இவ்வாறு தொடர்ந்து அவர்கள் நடந்தால் எனக்கு கொடுத்துள்ள விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க முதல்-அமைச்சர் அரும்பாடுபடுகிறார். அதேபோல் இந்த அவையை இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் முன்மாதிரியாக நடத்த முயற்சிக்கிறேன். எனவே எனக்கு எவ்வளவு அவமானம் வந்தாலும் அவையை சிறப்பாக நடத்துவேன்.
இவ்வாறு சபாநாயகர் ப.தனபால் பேசினார்.

Leave a Reply