- செய்திகள்

‘எந்தவித திட்டமும் இல்லாதவர் டிரம்ப்’ அமெரிக்க அதிபராகும் தகுதி படைத்தவர் ஹிலாரி ஒபாமா பாராட்டு…

பிலடெல்பியா, ஜூலை.29-
அமெரிக்க அதிபராகும் தகுதி மற்றவர்களை காட்டிலும் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக உள்ளதாக தற்போதைய அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் களம் காண்கிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் அதிபர் ஒபாமா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
தகுதியானவர்….
மக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் தன்மை கொண்டவர் ஹிலாரி கிளிண்டன். எனவே அவர் வெள்ளை மாளிகைக்கு செல்ல அனைவரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும். அவர் ஒருபோதும் தன்னுடைய கொள்கையில் இருந்து பின்வாங்கியதில்லை. அதுவே ஹிலாரி கிளிண்டனின் சிறப்பு.
ஹிலாரியை வீழ்த்த நினைப்பவர்களை (குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்) பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை விடவும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை விடவும், மற்ற ஆண், பெண்களை விடவும் அமெரிக்க அதிபராகி சேவையாற்றும் தகுதி படைத்தவர் ஹிலாரி.
டிரம்ப் மீது தாக்கு
மேலும் ஒபாமா குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பை ஒபாமா கடுமையாக விமர்சித்தார். அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு எந்த திட்டமும் வைத்திருக்காதவர் டொனால்ட் டிரம்ப் என்றும் அவர் சாடினார். ஒபாமாவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
————-

Leave a Reply