BREAKING NEWS

எது மனித உரிமை?

ஒரு என்கவுன்ட்டர் நாடெங்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே வருவதைத்தான் காண்பிக்கிறது.  மக்களை சிந்திக்க வைத்ததற்கு காரணம் காலம் தாழ்த்தப்பட்ட நீதி, சாட்சிகளின் காரணமாக குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை தராத நீதிமன்றங்கள்தான்.  நிர்பயா வழக்கு முடிவு, உன்னாவ் வழக்கு  என மனித உரிமை, சட்டத்தை   காரணம் காட்டி அவர்கள் தரப்பையும் கவனிக்க வேண்டும் என்ற மனித உரிமைக் குரலே.  எத்தனை குற்றவாளிகள் வேண்டுமானால் தப்பிக்கலாம், ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்று இன்னும் எத்தனை குற்றவாளிகளை தப்பிக்க விடப் போகிறோம்?

சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என வழக்கறிஞரின் வாதத்திறமையால் சட்டத்தில் உள்ள ஓட்டையின் வழியாக தப்பித்த குற்றவாளிகள் எத்தனை ஆயிரம் பேர்? தவறு செய்தவன் என்று தெரிந்தும் சாட்சிகள் இல்லாமல் தப்பித்தவர்கள் எத்தனை பேர்?

இன்று என்கவுன்ட்டருக்கு எதிராக பேசிவரும் மனித உரிமை ஆணையம், பல ஊடகவியலாளர்கள் சொல்வது இது ஒரு ஒழுங்கற்ற சமுதாயமாக மாறிவிடும், இன்று சரியான முடிவாக தெரிவது காலப்போக்கில் சரியான நபர்களுக்கும் இந்த நிலை வரும் பொழுது கேள்வி கேட்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டு விடும் என காரணம் கூறுகிறது.

உலக அளவில் இந்தியா பாலியல் வன்புணர்வு குற்றத்தில் 94 வது இடத்தில் உள்ளது. உலகில் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் சிறந்த கட்டமைப்பு செல்வ செழிப்புடன் உள்ள சுவிட்சர்லேண்ட் 4வது இடத்திலும் உள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி முதல் இடத்திலும் அருணாச்சல பிரதேசம் 5வது இடத்திலும் உள்ளது. ஆனால், மக்கள் தொகையின்படி மத்தியப் பிரதிதேசம் முதல் இடத்தில் உள்ளது. சிறிய மாநிலங்களில் பாலியல் வன்புணர்வு குற்றத்தில் சிக்கிம் முதல் இடத்தில் உள்ளது.  பாலியல் வன்புணர்வு குற்றம் குறைந்து சிறந்த மாநிலமாக தமிழ் நாடு 2015 முதல் 2017-ல் 342 குற்ற வழக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் படி பார்த்தால் தமிழ் நாடு முதல் இடத்திலும் யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி முதல் இடத்திலும் உள்ளது. குறைந்த மக்கள் தொகை கொண்டிருந்தாலும் ராஜஸ்தான் பாலியல் வன்புணர்வு குற்றத்தில் 3-வது  இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான், ஜம்மு, காஷ்மீர், ஹரியானா மற்றும் அருணாச்சலப்பிரதேசம் 12 வயதிற்கு  உட்பட்ட பாலியல் வன்புணர்வு குற்றத்தில் தூக்கு தண்டனை கொடுக்கும் அளவு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  சமீபத்தில் தெலங்கானாவும் 21 நாட்களுக்குள் தீர்வு காண ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியத் தேசிய மனித உரிமைக் கழகம் அக்டோபர் 12  1993-ல் தோன்றியது. இது மனித உரிமையைப் பாதுகாக்க 28 செப்டம்பர் 1993 போடப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டது. இதனை சட்டரீதியாக நடைமுறைப்படுத்த மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 உருவாக்கப்பட்டு தேசிய மனித உரிமை ஆணையம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இதன் உறுப்பினராக ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் இருப்பார்கள். அவர்கள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பார்.  இதுதவிர, தேசிய மாற்றுத்திறனாளிகள் ஆணையம், பட்டியலினத்தவர் ஆணையம், பெண்கள் சிறுபான்மையினர் நல ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் அலுவலர்களாக பணியாற்றுவார்கள். இவர்கள் தங்களுக்கு வரும் மனுக்கள் மூலமாக மூலமாகவோ தானாகவோ முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கலாம். ஆனால், இன்றளவில் மக்களுக்கு இவர்களின் மீது உள்ள நம்பிக்கை குறைந்து உள்ளது என்பதில் சந்தேகமில்லை. மக்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருந்து ஒரு விஷயத்தை அணுகுகிறார்கள். ஆனால், மனித உரிமை என்பது அனைவருக்கும் பொது. எதிர் தரப்பு நியாயத்தையும் கருத்த்தில் கொள்ள வேண்டும். ஒரு கொலைக்கு மற்றொரு கொலை தீர்வாகாது என்பதுதான் மனித உரிமை சட்டத்தின் சாராம்சம் மற்றும் அதை பின்பற்றுபவர்களின் வாதம்.

தண்டனைகள் மனிதன் தவறு செய்வதை தடுக்கவும் திருத்தவும்தான். ஆனால்,  மக்களின் எதிர்பார்ப்போ தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்பதுதான். யாருக்கு மனித உரிமை அளிக்க வேண்டும்? ஒரு உணர்ச்சி வசப்பட்டு முன் பகை காரணமாகவோ அல்லது ஏதோ ஒரு பிரதிபலனாக ஒருவர் குற்றம் இழைத்து தண்டிக்கப்படுகிறான் என்றால், சிறிது காலத்தில் அவன் திருந்தி விடுகிறான், தான் செய்த தவறை உணர்கிறான் அப்போது மனித உரிமை அவர்களுக்காகப் பரிந்து பேசலாம். ஆனால், மூன்று வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது, கோவையில் பத்து வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொன்றது, திட்டமிட்டு கொலை செய்து பின்னர் கருணை மனு கோருவது போன்றவற்றிற்கு மனித உரிமை கழகம் பேசும் பொழுது அந்த அமைப்பின் நோக்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடுகிறது. மனச்சிதைவு அடைந்த சிறு பெண்ணிடம் அம்பத்தூரில் ஆறு மாதங்களுக்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சம்பவம். சமீபத்தில் ஏழு வயதுப் பெண்ணை சென்னை மாநகரில் வன்புணர்வு செய்து எரித்தவன் ஜாமீனில் விட்டதன் காரணமாகத்தான் சொந்த தாயையே அவன் கொன்றது யாரும் மறந்திருக்க முடியாது.

மக்கள் எதிர் பார்ப்பது உடனடி தீர்ப்பு அல்ல, ஆனால், காலம் தாழ்த்தப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு என்பதை உணரவேண்டும். அரசியல் செல்வாக்கின் பின்புலம் கொண்ட ஒரு சில வழக்குகளை அவசர வழக்குகளாக எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடம் இருப்பது போல் ஒவ்வொரு வகையான குற்றத்திற்கும் இத்தனை நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படவேண்டும், தீர்த்து வைக்க வேண்டும் என சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.   மனித உரிமை என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் மனித உருவில் உள்ள மிருகங்களுக்கு அல்ல. செய்யும் குற்றத்தின் தன்மை பொறுத்து மனித உரிமை ஆணையம் தலையிட்டால் அதன் மாண்பு காப்பாற்றப்படும்.  அதைக் கொண்டு வந்த நோக்கமும் நிறைவேறும்.  சட்டத்தை மக்கள் மதிக்க வேண்டும் என்றால் சட்டத்தில் திருத்தம் ஏற்பட்டு குறுகிய காலத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நீதிமன்றங்கள்  மக்களின் கடைசி நம்பிக்கை புகலிடம்.  அந்த நம்பிக்கையை காப்பாற்ற சட்டம் மட்டுமல்ல, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் ஆவண செய்ய வேண்டும்.

ஒரு சட்டம் படிக்கும் பெண் செய்த ஓர் ஆய்வில் பாலியல் குற்றங்களில் வழக்கு நடத்தி தீர்ப்புக்கு தாமதம் ஆவதற்கு சாட்சியம் மற்றும் தடயங்கள் கிடைப்பதில்லை எனவும் கிடைத்தாலும் அது போதுமானதாக கருதப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல விமர்சனங்கள் மனித உரிமை கழகமும் சமூக ஆர்வலர்களும் கூறுவது சாட்சியம், தடயம் இல்லாமல் சட்டத்தை கையில் எடுப்பது தவறு எனவும் கூறப்படுகிறது. இந்த கேள்வி எழக் காரணம் பெண்களுக்கு உள்ள தயக்கமும் இது குறித்த விழிப்புணர்வும் இல்லாததுதான் என ஆய்வு கூறுகிறது. பாலியல் வன்கொடுமையை பாதிக்கப்பட்ட பெண்கள் இதனை வெளியில் சொல்ல தயங்குவதும் அப்படியே சொன்னாலும் அது பல நாட்கள் அல்லது மாதங்கள் ஆகி விடுவதால் பெண்ணிடம் இருந்து தடயங்கள் கிடைப்பதில்லை. அதனால்தான் சாட்சியத்தை வெளியே தேட வேண்டியுள்ளது.  எனவே, பெண்கள் இதுபோல் துன்பத்திற்கு ஆளாகும்பொழுது முதலில் தன்னை சுதாரித்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் அங்கு தன்னை பரிசோததிக்கக் கேட்டுக்கொண்டு, பரிசோதனையின் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, காவல் துறையில் வழக்கு தொடுத்தால் தடயங்களைப் பாதுகாக்கலாம்.  இது குறித்து பெண்கள் உணரவேண்டியது ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவினில் வைப்போம் என்ற பாரதி பிறந்த நாட்டில் உள்ள நாம் இதனை தனக்கு ஏற்பட்ட துன்பமாக மட்டும் எண்ணாமல் மற்றவர்க்கு இதுபோல் நடக்காமல் தடுக்க முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்க்கு அவர்கள் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் கொணர்ந்து குற்றம் இழைத்தவருக்கு உரிய தண்டனை பெற்று தருவதே பெண்கள் சமுதாயத்திற்கு நாம் செய்யும் பேருதவி.

 

 

 

 

 

– பேரா. ஆர்.காயத்ரி,

தொடர்புக்கு: r.gayatrisuresh@yahoo.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *