- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்தார் சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை, பிப்.22-
தே.மு.தி.க. சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்துள்ளார் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மாக்பா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண்பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகிய 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதேபோன்று நிலக்கோட்டை புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி, அணைக்கட்டு பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. கலையரசுவும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பதவி விலகல் கடிதத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் வழங்கினர். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

பதவி இழப்பு

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளதால், சட்டமன்ற பேரவை விதி 2(ஓ)-ன் படி, எதிர்கட்சித் தலைவராக பேரவைத் தலைவரால் அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழப்பதன் காரணமாக, அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும், சலுகைகளையும் இழக்கிறார் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

மேலும், தற்போது சட்டமன்றத்தில் 24 குறைவெண் கொண்ட எந்த சட்டமன்றக் கட்சியும் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவர் என்று வேறு எந்த சட்டமன்றக் கட்சித் தலைவரையும் அங்கீகரிக்க இயலாது என்றும் பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இணைய திட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தே.மு.தி.க.அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜினாமா பற்றி புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமி கூறியதாவது:–-

அ.தி.மு.க. அரசில் புதிய தமிழகம் கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ. ஆக இருந்து பணியை பூர்த்தி செய்து விட்டேன். புதிய தமிழகம் கட்சியில் இருந்து இதுவரை அழைப்பு எதுவும் வரவில்லை. எனவே எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply