- செய்திகள், விளையாட்டு

ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா ‘சஸ்பெண்ட்’

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச். 9:-
உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், தற்போது தரவரிசையில் 7-ம் இடத்தில் இருப்பவருமான, ரஷியாவின் மரியா ஷரபோவா ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை தற்காலிகமாக ‘சஸ்பெண்ட்’ செய்து சர்வதேச டென்னிஸ் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின்போது வீரர், வீராங்கனைகளுக்கு  சர்வதேச டென்னிஸ் அமைப்பின் சார்பில்  சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு ஊக்கமருந்து சோதனை நடத்தியது. அப்போது, மகளிர் ஒற்றையர் பிரிவில்  செரீனா வில்லியம்சுடன் காலிறுதிப்போட்டியில் ஷரபோவா விளையாட இருந்தார்.

அந்த போட்டிக்கு முன், ஷரபோவாவின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு ஊக்கமருந்துச் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஷரபோவா தடை செய்யப்பட்ட ‘மெல்டோனியம்’ எனும் மருந்தை அவர் எடுத்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை வரும் 12-ந்தேதி வரை தற்காலிகமாக தடை செய்து ஐ.டி.எப். அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே இந்த மெல்டோனியம் எனும் மருந்து, கடந்த 2015ம் ஆண்டு இறுதிவரை தடை செய்யப்பட்ட மருந்துகள்  பட்டியலில் வரவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாதமே தடைப் பட்டியலுக்குள் சர்வதே  டென்னிஸ் அமைப்பு கொண்டு வந்தது. இது தெரியாமல் சரபோவா உட்கொண்டதால் இப்போது சிக்கிகொண்டார். பொதுவாக ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடையும் பட்சத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை தடைவிதிக்க வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் மேட்டர்….

என் ரசிகர்களை தலை குனியவைத்துவிட்டேன்

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு ஷரபோவா அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக எனது குடும்ப மருத்துவரால் சட்டப்பூர்வமாக ‘மில்ட்ரோனேட்’ எனும் மருந்து உட்கொண்டு வருகிறேன். அதில் மெல்டோனியம் மருந்து கலந்துள்ளது எனக்கு தெரியாது. கடந்த ஆஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் போட்டியின்  காலிறுதிப்போட்டியின் போது எனக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அதன்பின், கடந்த மாதம் எனக்கு சர்வதேச டென்னிஸ் அமைப்பு அனுப்பிய கடிதத்தில் நான் தடைசெய்யப்பட்ட மெல்டோனியம் மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பினர்.

இந்த மருந்தை சர்வதேச ஊக்கமருந்துக்கு எதிரான அமைப்பு கடந்த ஜனவரி மாதம் தடை செய்துள்ளது. அது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதை நான் கவனிக்கவில்லை. இந்த ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததற்கு நான் முழுபொறுப்பு ஏற்கிறேன்.

என் ரசிகர்களையும், விளையாட்டையும் தலைகுனிவுக்கு ஆழாக்கி மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். டென்னிசை ஆசையுடன் நேசித்து 4-வயதில் இருந்து மிகுந்த ஆசையுடன்  விளையாடி வருகிறேன்.  இந்த தவறால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திப்பேன் என எனக்கு தெரியவில்லை.

சர்வதேச டென்னிஸ் அமைப்பின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்.  ஆனால், எனது டென்னிஸ் வாழ்க்கையை இத்துடன் முடித்து விட்டு ஓய்வு அறிவிக்க நான் விரும்பவில்லை. (அப்போது கண்ணீர் விட்டு அழுதார்) எனக்கு மற்றொரு வாய்ப்பு டென்னிஸ் விளையாட கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாக்ஸ் மேட்டர்….
ஒப்பந்தம் துண்டிப்பு…
ஷரபோவா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதையடுத்து அவருடன் ஒப்பந்தம் செய்துள்ள நைக் நிறுவனம் ஒப்பந்தத்தை தற்காலிகமாக துண்டித்துள்ளது. இது குறித்து நைக் நிறுவனம் வௌியிட்ட அறிவிப்பில், “ மரியா குறித்த விஷயம் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். ஊக்கமருந்து தொடர்பான விசாரணை தொடரும்வரை, சரபோவாவுடனான தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்படுகிறது'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை இருக்கிறது…..
ரஷிய டென்னிஸ் அமைப்பின் தலைவர் ஷமில் டர்பிச்சேவ் கூறுகையில், மரியா ஷரபோவா ஆகஸ்ட் மாதம் ரியா நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவார் என நம்பிக்கை இருக்கிறது என்றார்.

ஷரோபாவும்… காயமும்…
5 கிராண்ட்ஸ்லாம், 35 டென்னிஸ் பட்டங்கள், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம்,  அழகு, திறமை, துணிவு என ஒட்டுமொத்தமாக கொண்டிருக்கும் 28 வயது டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா. டென்னிஸ் போட்டி மட்டுமல்லாது, மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார் ஷரபோவா. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 3.5 கோடி அமெரிக்க டாலர் சொத்துமதிப்பு கொண்டவர். கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் இருந்தே காயத்தால் மரியா மிகவும் அவதிப்பட்டு வந்தார். 2015 யு.எஸ். ஓபன் போட்டியில் காயத்தால் விலகினார், மேலும், இந்த வாரம் தொடங்க இருந்த இன்டியானா வெல்ஸ் போட்டியில் இருந்து விலகினார். கடைசியாக 2014-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தார் ஷரபோவா என்பது குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் சிக்கினார்கள்?
சர்வதேச ஊக்கமருந்துதடுப்புஅமைப்பின் சோதனையில் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, ஐஸ் டான்சரும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ரஷியாவின் காத்தரீனா பாப்ரோவா, சைக்கிள் வீராங்கனை எட்வார்ட் வர்கனோவ், தடகள ஓட்டவீராங்கனை அபிபா அரிகாவி, உக்ரைன் வீராங்கனைகள் சிலரும் கடந்த வாரத்தில் சிக்கியுள்ளனர்.

மில்ட்ரோனேட் என்றால் என்ன?
மில்ட்ரோனேட் எனும் மருந்து, சோவியத், ஐரோப்பிய நாடுகளில் மக்கள் இதயநோய்க்கும், கழுத்து, கை,கால் மூட்டு வலிக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் உள்ள மெல்டோனியம் மருந்து உடல் செயல்பாட்டை ஊக்குவித்து சுறுசுறுப்பாக்கு்ம் என்பதால்  விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த தடை உள்ளது.

Leave a Reply