- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு நாட்டை வழி நடத்துவதில் பெண்களுக்கு உரிய பங்கு

சென்னை, பிப்.22-

நாட்டை வழி நடத்துவதில் பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டமசோதா ஒரு மனதாக நிறைவேற்றித் தந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மகப்பேறு மருத்துவ சேவை

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் அளவுகோலாகக் கொண்டு அளப்பது அல்ல.  வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும், அதிலும் குறிப்பாக, பெண்களை சென்றடைய வேண்டும்.  உண்மையான வளர்ச்சியின் அளவுகோல் பெண்கள் எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதே ஆகும்.

பெண்களின் திறமையும், ஆற்றலும் வெளிப்படுத்தப்பட்டு சமுதாயத்துடன் ஒன்றிணைந்த ஓர் அங்கமாக பெண்கள் திகழும் போது வளர்ச்சி பன்மடங்காக உயரும்.  எனவே தான், பெண்களின் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு புதுமைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கென பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் தான் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தாலிக்கு தங்கம்

மேலும், தாலிக்கு தங்கத்துடன் உதவித் தொகை வழங்கும் திருமண உதவித் திட்டம், தாய் சேய் நலன் காக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மகப்பேறு நிதி உதவித் திட்டம், மகளிர் எழுத்தறிவுத் திட்டம், பெண்களின் சுகாதாரத்தினை பேணும் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் 13 அம்சத் திட்டம் என பல்வேறு நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒரு நல்ல அரசின் கடமை பெண்களை காப்பதோடு மட்டும் முடிவடைவதில்லை.  பெண்கள் தங்கள் சொந்தக் கால்களிலே நிற்கும் திறன் பெற வேண்டும்.  எனவே தான், பெண்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு தொழிற்பேட்டைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.

மேலும், விலையில்லா கறவை பசு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், வீட்டில் பணிச் சுமையைக் குறைத்து பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கு உரிய பங்கு

பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்.  பொறுப்பு வழங்கப்பட்டால் பெண்கள் தங்கள் தலையெழுத்தை மட்டுமல்லாமல், மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும்.

எனவே தான், உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு என மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய மன்றங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி

இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டால்  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் மேலும் அதிக அளவில் பங்கு பெறுவதை உறுதி செய்ய இயலும்.  அதன் மூலம், நகரம் மற்றும் கிராமப்புரங்கள் விரைந்த வளர்ச்சி அடையும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.  எனவே, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மூன்றில் ஒரு பங்கு என பெண்களுக்கு தற்போது  ஒதுக்கப்பட்டுள்ள  பதவிகள் 50 சதவீதம் ஆக உயர்த்தப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டேன்.

அதன் அடிப்படையில், 20.2.2016 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இதற்கான சட்ட திருத்த சட்ட முன்வடிவு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் கொண்டு வரப்பட்டது. சட்டமன்றப் பேரவையால் இது ஆய்வு செய்யப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவை ஒரு மனதாக நிறைவேற்றிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply