- செய்திகள், விளையாட்டு

உலக 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு கோலி கேப்டன்

 

கொல்கத்தா, ஏப்ரல் 5:-

உலக 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இந்த நிலையில் உலக அளவிலான 20 ஓவர் உலக கிரிக்கெட் அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் இந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளனர். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் ஆட்டத் திறனை வைத்து இந்த அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அந்த அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடர் நாயகனாக கோலி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோலி, இந்தியா விளையாடிய 5 ஆட்டங்களிலுமாக மொத்தம் 273 ரன்கள் எடுத்தார். இவர் 3 அரை சதங்களையும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்து. இதையடுத்து சிறப்பான பேட்டிங்கையொட்டி அணியின் கேப்டனாக கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 29 பவுண்டரிகளையும் 5 சிக்ஸர்களையும் விளாசினார்.

இந்தியாவைப் பொருத்தவரை பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் உலக அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் 5 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தியுள்ளார். ஆனால் இவர் விட்டுக் கொடுத்த ரன்கள் மிகவும் குறைவு என்பதால் இவர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.

இவர்கள் தவிர உல கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியில் இருந்து 4 பேரும் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து இரண்டு பேரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து ஒருவர் என 11 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் 12-வது ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் அணியில் மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஸ்டபேனா டெய்லர் கேப்டனாக நியமிகப்பட்டுள்ளார். இவர் தவிர நியூசிலாந்து அணியிலிருந்து 4 பேரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து தலா இரண்டு பேரும், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவிலிருந்து தலா ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அணியில் இந்திய வீராங்கனை ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்து.

இந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொது மேலாளர்(கிரிக்கெட்) ஜெஃப் அல்லார்டிஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் இயான் பிஷப், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்,  ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை மெல்ஜோன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேகர்,  இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை லிசா ஆகியோர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெஃப், 26 அணிகளும் பங்கேற்ற 400 வீரர், வீராங்கனைகளிலிருந்து உலக 20 ஓவர் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்றும் இந்தப் போட்டியில் அனைத்து வீரர், வீராங்கனைகளும் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

உலக 20 ஓவர் ஆடவர் அணி விவரம்
ஜான் ராய் (இங்கிலாந்து), டிகாக் (தென் ஆப்பிரிக்கா-விக்கெட் கீப்பர்), விராட் கோலி (இந்தியா- கேப்டன்), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), ஆன்ட்ரே ரஸ்ஸர் (மேற்கிந்தியத் தீவுகள்), மிச்சேல் சந்த்னர் (நியூசிலாந்து), டேவிட் வில்லே (இங்கிலாந்து), சாமுவேல் பட்ரீ (மேற்கிந்தியத் தீவுகள்),  ஆஷிஷ் நெஹ்ரா (இந்தியா) 12-வது ஆட்டக்காரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் (வங்கதேசம்)

Leave a Reply