- செய்திகள், விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் போட்டி இந்திய அணி கோலாலம்பூர் சென்றது

புதுடெல்லி, பிப்.26:-
உலக டேபிள் டென்னிஸ் போட்டி கோலாலம்பூரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி நேற்று கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது.

இந்தப் போட்டி வரும் 28-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சரத் கமல் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. 5 ஆடவர், 5 மகளிர் கொண்ட இந்த அணியில் சரத் கமல், அந்தோனி அமல்ராஜ், சௌம்யஜித் கோஷ், ஹர்மீத் தேசாய், சத்யன் ஆகிய ஆடவர்களும் மனிகா பத்ரா, மௌமா தாஸ், ஷாமினி, பூஜா சஹஸ்ரபுத்தே, மாதுரிகா பட்கர் ஆகிய மகளிரும் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பவானி முகர்ஜி, அருப் தாஸ் ஆகிய 2 பயிற்சியாளர்களும் சென்றுள்ளனர்.

உலகப் போட்டி அணிகளுக்கு இடையிலான போட்டியாகவே நடைபெற உள்ளது. டோக்கியோவில் நடந்த கடந்த போட்டியில் இந்திய ஆடவர் அணி 33-வது இடத்தையும் மகளிர் அணி 29-வது இடத்தையும் கைப்பற்றியது.

இந்திய அணி பாட்டியாலாவில் பயிற்சியை மேற்கொண்டுவிட்டு கோலாலம்பூர் சென்றுள்ளது.

Leave a Reply