- உலகச்செய்திகள், செய்திகள்

உலகிலேயே இந்திய அணிதான் கெத்து-தோனி

மிர்பூர், மார்ச் 5:-

தற்போதைய 20 ஓவர் இந்திய அணி, உலகில் எந்த அணியையும் எதிர் கொள்ளும் வல்லமை பெற்றுள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இந்திய அணிக்கான லீக் ஆட்டங்கள் முடிவுற்றுள்ள நிலையில் அந்த அணி பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் என நான்கு அணிகளையும் வெற்றி கண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் இதுவரை இந்தியா மோதியுள்ள 10 ஆட்டங்களில் 9-ல் வெற்றி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி,20 ஓவர் இந்திய அணி சரிசமான பந்து வீச்சாளர்களையும் பேட்ஸ்மேன்களையும் கொண்டுள்ளது என்றும் உலகில் எந்த நாட்டிலும் எந்த அணியையும் இந்திய அணி எதிர் கொள்ள தயாராக உள்ளது என்றும் பெருமிதமாக குறிப்பிட்டார்.

3 வேகப் பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், தேவையானால் பகுதி நேர பந்து வீச்சாளர்களையும் இந்திய அணி கொண்டுள்ளது. இது ஒரு சரிசமான அணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இறுதிப் போட்டி சவாலான ஒன்றுதான் என்று குறிப்பிட்ட தோனி, போட்டி வங்கதேசத்தில் நடைபெறுவதால் ஆடுகளம் குறித்த தன்மை அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் தெரிவித்தார்.

வங்கதேச அணி சமீப காலங்களில் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றும் அந்த அணிக்கு ஆடுகளம் குறித்து நன்றாக தெரியும் என்பதாலும் இறுதிப் போட்டி விறுவிறுப்பான ஒன்றாக இருக்கும் என்றும் தோனி குறிப்பிட்டார்.

இந்திய அணியும் இந்த ஆடுகளத்தில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. எனவே தங்களுக்கும் ஆடுகளம் குறித்து நன்கு தெரியவந்துள்ளது என்றும் எந்த அணி வலிமையானது என்பது பிரச்சினையில்லை என்றும் வெற்றிக்கான சரியான திட்டத்தை தீட்டி அதை நடைமுறைபடுத்துவதான் முக்கியம் என்றும் தோனி குறிப்பிட்டார்.

அடுத்த வரும் 20 ஓவர் போட்டிக்காக இந்திய அணி நன்றாக தயாராகி வருகிறது என்றும் அணி வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அற்புதமான மனிதாபிமானி
குரோவுக்கு தோனி புகழாரம்

இதனிடையே நேற்று முன் தினம் காலமான நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரேவின் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட தோனி, அவர் அற்புதமான மனிதாபிமானி என்று தெரிவித்தார்.

உண்மையாக சொல்ல வேண்டுமானால் குரோவின் ஆட்டத்தை தான் கண்டதில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நிறைய நியூசிலாந்து வீரர்களுடன் தான் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், அவர் இறந்த நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சோகமான நாள் என்றும் தோனி குறிப்பிட்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல இறைவன் உறுதியான மனோதிடத்தை அளிக்க வேண்டும் பிரார்த்திப்பதாகவும் தோனி குறிப்பிட்டார்.

Leave a Reply