- செய்திகள்

உற்பத்தி துறையில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு…

சென்னை, ஜூலை. 30-

"நடப்பாண்டில், பொருளாதார தேக்கநிலை  மாறி,  பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க பொதுவான அறிகுறிகள் தென்படுகின்றன.   அதனால்தான் உற்பத்தி துறையின் வளர்ச்சியும், அதிகரித்து வருகிறது. நம்   மாநிலத்தில்  அரசு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை   எடுத்து வருகின்றது" என்று, சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
என் கடமை
நிதி நிலை  அறிக்கையின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய உறுப்பினர் கே.என். நேரு (தி.மு.க.) நிதிநிலை  பற்றி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க நான்  கடமைப்பட்டுள்ளேன். முதலாவதாக, பெட்ரோல் விலை குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள  வரி இழப்பைச் சமாளிக்க, இந்த அரசால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  ஒரு கேள்வி எழுப்பினார்.

உற்பத்தித் துறையில் வளர்ச்சி
நடப்பாண்டில், பொருளாதார தேக்கநிலை மாறி,  பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க பொதுவான அறிகுறிகள் தென்படுகின்றன.  அதனால்தான் உற்பத்தி துறையின் வளர்ச்சியும், அதிகரித்து வருகிறது. நம்  மாநிலத்தில்  அரசு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, தனியார்  முதலீடுகளும் ஈர்க்கப்பட்டு வருகின்றன.  சிறு, குறு தொழில்களிலும்,  போடப்பட்ட பல ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையெல்லாம்  பொருளாதார சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
வருங்காலத்தில் மாறும்
அதன்  அடிப்படையில்தான், வரி வருவாயிலும்,  2015-2016 ஆம் ஆண்டு கணக்குப்படியான  வருவாயில் சுமார் 12.50 சதவீத வளர்ச்சியைச் சேர்த்து, 2016-2017-ல் வரி  வருவாய் கணிக்கப்பட்டுள்ளது.
கடன் அளவு 2.52 லட்சம் கோடி ரூபாயாக  உயர்ந்துவிட்டது என்றும், இதனால் அதிகரிக்கும் வட்டி சுமையைச் சமாளிக்க  அரசு என்ன செய்யப்போகிறது எனவும், கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி,  தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் 6,353 கோடி ரூபாய் கடனை, அரசு  ஏற்றுக்கொண்டதன் காரணமாகவும், கடன் அளவும், வட்டிச் சுமையும்  அதிகரித்துள்ளது.  எனினும், இது நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச்  சட்டத்தின் வரையறைக்குள் இருப்பதால், அரசுக்கு கடனையும், வட்டியையும்  செலுத்தும் திறன் உள்ளது என்றும், அதனை தவணை தவறாமல் செலுத்தி வருகின்றது  என்றும், ஏற்கெனவே தெளிவுபடுத்தினேன்.  கடனைக் குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து  இல்லை.   ஆனால் தற்போதைய பொருளாதார மந்த நிலையில், மாநில அரசு கடன் பெற்றுத்தான்  நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டியுள்ளது. வருங்காலத்தில் இத்தகைய  நிலை மாறும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply