- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.16 கோடி பறிமுதல்; 1857 வழக்குகள் பதிவு

சென்னை, மார்ச் 31-
தேர்தல் அதிகாரிகளின் சோதனையில், 28-ந் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.16 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1857 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
50 டன் பாமாயில் பறிமுதல்
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் ஆகியோர் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கம், பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். விசாரணைக்குப்பின், சரியாக இருந்தால் உரியவரிடம் ரொக்கம், பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, 28-ந் தேதி பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் பெரம்பலூரில் ரூ.4.51 லட்சம், வேலூரில் ரூ.1.7 லட்சம், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.2.5 லட்சம், சென்னையில் ரூ.3.61 லட்சம், திருவாரூரில் ரூ.45.85 லட்சம் என மொத்தம் ரூ.57.87 லட்சம் ரொக்கம் மற்றும் மதுவகைகள் கைப்பற்றி ரொக்கம்  சார் கரூவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
ரூ.16.30 கோடி பறிமுதல்
இதுபோன்று, நிலையான கண்காணிப்புக் குழுவினர் 28-ந் தேதி நடத்திய சோதனையின் போது, நாகப்பட்டினத்தில் 50 டன் பாமாயில், சேலம் நகர்பகுதியில்             ரூ.13.77 லட்சம், திருவாரூர் மாவட்டத்தில் ரூ.72.27 லட்சம் என மொத்தம், ரூ.87.38 லட்சம் ஒரே நாளில் பமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆகமொத்தம் 28-ந் தேதி வரை நிலையான கண்காணிப்புக் குழுவின் மூலம் ரூ.9.01 கோடி, பறக்கும்படையினரால் ரூ.7.29 கோடி என ெமாத்தம் ரூ.16.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
தேர்தல் விதிகளை மீறியதாக கட்சிக் கொடியை பொது இடத்தில் இருந்து அகற்றாதது, அனுமதியில்லாமல் சாலைகளை சீரமைத்தது, கட்சி கொடி கம்பம் அமைக்க பள்ளம் தோன்டியது, சுவரில் போஸ்டர் ஒட்டியது பள்ளி மாணவர்களுக்கு உரிய அனுமதியில்லாமல் ஸ்கூல் பேக் வழங்கியது, கோர்ட் சுவரில் விளம்பரம் செய்தது, லாரிகளில் கட்சி விளம்பரம் செய்தது போன்ற புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
30-ந் தேதி வரை பொது சொத்தில் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர் கட்டி சேதம் ஏற்படுத்தியதாக பெறப்பட்ட ஒரு லட்சத்து 93,252 புகார்களில் ஒரு லட்சத்து 82,788 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. மேலும் தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ததாக பெறப்பட்ட 76,542 புகார்களில் 68,652 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இதுவரை தேர்தல் விதிகளை மீறியதாக 1054 வழக்குகளும், வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக 803 வழக்குகளும் என மொத்தம் 1857 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply