- செய்திகள், மாநிலச்செய்திகள்

‘உரிமைக்காக போராடும் ஏழை மக்களை ஒடுக்கும் மோடி அரசு’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புது டெல்லி, மார்ச் 8-

உரிமை கேட்டு போராடும் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவு மக்களை மோடி அரசு ஒடுக்கி வருவதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது-

ஒடுக்க முயற்சி

‘‘மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் என் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். அதைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை.

ஆனால், நான் ஆதரித்து வரும் ஏழைகள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரை அவர்கள் ஒடுக்க முயற்சிக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது.

கண்ணையா குமார்

சத்தீஷ்காரின் பஸ்தார் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் என்னை இன்று சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் பஸ்தார் பகுதியில் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், மிரட்டப்படுவதாகவும் என்னிடம் தெரிவித்தனர்.

மக்களை அடித்து உதைப்பதாலோ அல்லது மிரட்டுவதாலோ இந்த நாட்டுக்கு எந்தப்பயனும் இல்லை. ஐதராபாத்தில் ரோகித் வெமூலாவுக்கு நீங்கள் நிர்பந்தம் கொடுத்தீர்கள். இங்கு கண்ணையா குமார் மற்றும் மாணவர்களை நிர்பந்தம் செய்து வருகிறீர்கள்.

உரிமை கோரி..

எங்கெங்கு ஏழைகள் உரிமை கோருகிறார்களோ, அவர்கள் விவசாயிகளோ, தலித்துகளோ, பழங்குடியின அல்லது சிறிய வர்த்தகர்களாகவோ இருந்தாலும் சரி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு-மோடி அரசு அவர்களை ஒடுக்க முயற்சிக்கிறது.

இந்த மக்கள்தான் இந்தியாவின் உண்மையான பலமாக விளங்குகிறார்கள். அவர்களை ஒடுக்குவதன் மூலம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. சட்டத்தை யாராவது மீறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். ஆனால், ஏழைகளை அச்சுறுத்தி பணிய வைப்பதால் நாட்டுக்கு பயன் இல்லை.

தனிப்பட்ட முறையில்

‘‘சிலருக்கு வயது கூடினாலும் பக்குவம் வளரவில்லை’’ என்று  நாடாளுமன்றத்தில் என்னைப்பற்றி விமர்சிக்கப்பட்டது. பிரதமரோ அல்லது அவருடைய அமைச்சர்களோ என்னை தாராளமாக தாக்கிப் பேசலாம்.

பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் என் மீது தாக்குதல் தொடுத்து வருகிறார். அவருடைய அமைச்சர்களும் தினசரி அதையே செய்து வருகிறார்கள்’’.

இவ்வாறு ராகுல் கூறினார்.

Leave a Reply