- செய்திகள், மாநிலச்செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் தொடரும் விபரீதம் மகள் திருமண விழாவில், குண்டு பாய்ந்து போலீஸ்காரர் பலி

லக்னோ, மார்ச் 8-

உத்தரப்பிரதேசத்தில் மகள் திருமண விழாவை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியபோது, போலீஸ்காரர் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார்.

தொடரும் விபரீதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணம், பிறந்த நாள் போன்ற விழாக்களில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதுபோன்ற விபரீத சம்பவங்களில், தவறுதலாக குண்டு பாய்ந்து பலர் உயிர் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், விழாக்களில் துப்பாக்கியால் சுடுவதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டது.

கோலாகல விழா

இந்த நிலையில், உ.பி.யின் மணிப்புரி அருகில் உள்ள போகான் பகுதியில் ராஜேந்திரசிங் (வயது 45) என்ற போலீஸ்காரரின் இல்ல திருமண விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

துப்பாக்கியால் சுட்டு கோலாகலமாக திருமண விழா நடைபெற்றபோது, எதிர்பாராதவிதமாக போலீஸ்காரர் ராஜேந்திரசிங் மீது குண்டு பாய்ந்தது.

பலியானார்

உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பயன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹுமான்ஷு குமார் இந்த தகவலை தெரிவித்தார்.

Leave a Reply