- செய்திகள், தேசியச்செய்திகள்

உத்தரப்பிரதேச பா.ஜனதா முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? ராஜ்நாத்சிங் பேட்டி…

ஆமதாபாத், மே 20-

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா கட்சியின் முதல்.அமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்தார்.

தேர்தல் பணி
உத்தரபிரதேச பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத்  தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் சமாஜ்வாடியும்,  ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதாவும், பகுஜன் சமாஜ் மற்றும்  காங்கிரஸ் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில்  பா.ஜனதா கூட்டணி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73-ஐ கைப்பற்றி  இருந்தது. மீண்டும் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவின் பலத்தை நிரூபித்து  ஆட்சியை கைப்பற்ற தேர்தல் பணியை அக்கட்சி தொடங்கிவிட்டது.

முதல்வர் வேட்பாளர்

சமீபத்தில் நடந்து முடிந்த அசாம் சட்டசபை தேர்தலில், பா.ஜனதா கட்சி சார்பில் சர்வானந்தா சோனாவால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதேபோல், உ.பி.யிலும் பா.ஜனதா கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வருண்காந்தி உள்ளிட்ட சிலருடைய பெயர்கள் இதற்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆமதாபாத் வந்த ராஜ்நாத்சிங் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக  பா.ஜனதா ஆட்சி மன்ற குழு முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
‘‘அசாமில் வேட்பாளரை  முன்கூட்டியே அறிவித்து வெற்றிப் பெற்றது, ஆனால் பீகாரில் யாரையும்  அறிவிக்காமல் தோல்வியை தழுவியது என்பது தொடர்பாக விளக்கம் அளித்த ராஜ்நாத்சிங் மராட்டியம், அரியானா மற்றும் ஜார்கண்டில் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்காமலேயே, பா.ஜனதா வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டினார்.

—-.

Leave a Reply