- செய்திகள், தேசியச்செய்திகள்

உத்தரகாண்ட் அரசியல் நெருக்கடி எதிரொலி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்துவைப்பு

புதுடெல்லி, மார்ச் 31-

உத்தரகாண்ட் அரசியல் நெருக்கடி எதிரொலியாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. இதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார்.

பட்ஜெட் கூட்டத் தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக கூட்டப்பட்டது. முதல் கட்ட கூட்டத் தொடர் கடந்த 16-ந்தேதி நிறைவடைந்தது.

39 நாள் ஓய்வுக்குப்பின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுவதாக இருந்தது.

உத்தரகாண்ட் விவகாரம்

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில அரசு, கடந்த ஞாயிற்றுக்கிழமை கலைக்கப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், அந்த மாநிலத்தில் ஏப்ரல் 1-ந்தேதிக்குப் பிந்தைய செலவினங்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவசர சட்டம்

இதற்காக மத்திய அரசு சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டு இருக்கும்போது, மத்திய அரசால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது. (ஓய்வில் இருந்தாலும், அது கூட்டத் தொடராகவே கருதப்படும்.).

இதனால், உத்தரகாண்ட் நிதி ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் விதத்தில், நாடாளுமன்றத்தின் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்து வைப்பது என ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரத்துக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜி உத்தரவு

அதன்பின் நேற்று முன்தினம் இரவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்து, அமைச்சரவையின் முடிவு பற்றி எடுத்துக்கூறினார்.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பட்ஜெட் கூட்டத் தொடரையும் முடித்து வைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தார்.

2-ம் கட்ட கூட்டத் தொடர்

இனி, ஏப்ரல் 25-ந்தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடருக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.

உத்தரகாண்ட் சட்டசபையில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தாலும், சரியான விதிமுறைகளின்படி அந்த மசோதா நிறைவேறியதா? என்ற கேள்வி கவர்னர் கே.கே.பால் அனுப்பிய அறிக்கையில் எழுப்பப்பட்டு உள்ளது.

கவர்னரின் இந்த அறிக்கை அடிப்படையில்தான் உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

————

Leave a Reply