- செய்திகள்

உடுமலை அருகே சத்துணவு பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை? போலீஸ் விசாரணை

உடுமலை, ஆக.25-

உடுமலை அருகே சத்துணவு பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்துணவு பெண் ஊழியர்

கோவை அருகே உடுமலையை அடுத்த தளி பக்கமுள்ள விளாமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். தொழிலாளி. இவரது மனைவி கலாவதி (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள சத்துணவு கூடத்தில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் உடுமலை-ஆனைமலை ரோட்டில் செங்குட்டை என்ற இடத்தில் உள்ள வாய்க்கால் அருகே கலாவதி பிணமாக கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து இதுபற்றி தளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பலாத்காரம் செய்து கொலை?

அதன்பேரில் உடுமலை போலீஸ் டி.எஸ்.பி. விவேகானந்தன் மற்றும் போலீசார்  சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கலாவதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே கற்கள், சுத்தியல் கிடந்தது. இதனால் அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. உடல் துர்நாற்றம் வீசுவதால் கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அவர் அரை நிர்வாண கோலத்தில் கிடந்ததால் அவரை மர்ம கும்பல் கடத்தி வந்து பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைதொடர்ந்து கலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் அவரை கொலை செய்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply