BREAKING NEWS

‘உடல்  வேறாயினம்  உளம்  ஒன்றே’ – ஔவை ந.அருள்

பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தில் பதின்மூன்றாவது நூலான ஐந்திணை எழுபது மற்றும் பதிநான்காவது நூலான ஐந்திணை ஐம்பது நூல்களின் ஒரு சில பாடல்கள் மூலம் ஐவகை நிலத்தின் தலைவன் தலைவி சூழல்களை தோழியானவள் இருவருக்கிடையிலும் நிலைமைகளை எவ்வாறு பகர்கிறாள் என்பதை ஒரு சில சுவையான பாடல்கள் வாயிலாக அறியலாம்.

 

 1. ஐந்திணை எழுபது

அறிமுகவுரை

திணைக்குப் பதினான்கு பாடல்களாக, ஐந்திணைகளுக்கும் எழுபது பாடல்கள் ஆனமையால் இந்நூல், இப்பெயரினை பெற்றது.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவே ஐவகை நிலங்கள்.  பாலையென்பது, நிரந்தரப் பிரிவன்று, குறிஞ்சியும் முல்லையும் முதுவேனிற் பருவத்தில் தம் இயல்பு திரிந்து தோன்றுவதாகும்.  எனவே, நிரந்தரப் பிரிவுகள் நான்கே.  இதன் காரணமாகவே உலகம், ‘நானிலம்’ என்பதாயிற்று.

இந்நூலில், முல்லைத் திணையில் 25, 26 ஆகிய இரண்டு பாடல்களும், நெய்தல் திணையில் 69, 70 ஆகிய இரண்டு பாடல்களும் கிடைத்தில.

இந்நூற் பாடல்களை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலியோர் தத்தம் உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளனர்.  இந்நூல், தெளிந்த நடையைக் கொண்டுள்ளது.  சான்றாக,

‘சான்றவர் கேண்மை சிதைவின்றா யூன்றி,

வலியாகிப் பின்னும் பயக்கும்’ – குறிஞ்சி 5

 

‘பெருந்தகு தாளாண்மை கேற்க அரும்பொரு

ளாகுமவர் காத லவா                – முல்லை 15

 

என்றாற்போன்ற சிறந்த கருத்துகள் ஆங்காங்கே உள்ளன.

 

இந்நூலை இயற்றியவர் மூவாதியார்.  இவரைச் சிலர் சமணரென்பர்.  இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றிச் சென்றுள்ளாரோ என்பதை அறியலாம்.

 

‘கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர், காதலர்

உள்ளம் படர்ந்த நெறி’                              – ஐ.ஐ.38

 

‘கள்ளர் வழங்கு சுரமென்பர், காதலர்

உள்ளம் படர்ந்த நெறி’                              – ஐ.எ.36

 

 1. குறிஞ்சி

(தலைமகன் சிறைப்புறத்தாளாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது)

 

மன்றப் பலவின் களைவிளை தீம்பழம்

உண்டுவந்து மந்தி முலைவருடக் – கன்றமர்ந்(து)

ஆமா சுரக்கும் அணிமலை நாடனை

யாமா பிரிவ(து) இலம்.                            4

மலைநாட்டு பொதுமன்றிலிருந்த பலாமரத்தின் முதிர்ந்து கனிந்த பழச்சுளையைத் தின்று மகிழ்ந்த, நீர் வேட்கை மிக்க பெண் குரங்கு, காட்டுப் பசுவின் மடியைத் தடவவும், அப்பசுவானது தனது கன்றுக்குப் பால் சுரந்து கொடுப்பதைப் போன்று பாலைச் சுரந்து கொடுக்கும்படியான மலைநாட்டு தலைவனை யாம் இனிமேலும் பிரிந்து வாழ இயலாது என்றாள் தலைவி.  இதன் மூலம் தலைவனை விரைவாக மணந்து கொண்டு, இல்வாழ்வை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைவி வலியுறுத்தினாள்.

 

 1. முல்லை

(பருவங்கண்டு அழிந்த தலைமகள், தோழிக்குச் சொல்லியது)

 

ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம்

பீவி பரப்பி மயில்ஆலச் – சூலி

விரிகுவது போலும்இக் கார்அதிர ஆவி

உருகுவது போலும் எனக்கு.                 5

‘மயில் கூட்டங்கள் மிகவும் விருப்பங்கொண்டு, மழைத்துளிகளைக் கூவியழைத்தவாறு முல்லை நிலத்தின் பக்கங்களிலெல்லாம் தம் அழகிய தோகைகளை விரித்தபடி ஆடுகின்றன.  அவற்றின் அழைப்பிற்கேற்ப, கருக்கொண்ட மேகங்கள், இடிமுழக்கங்கள் மின்னுகின்றன.  இத்தகைய கார்காலத்து மழையால், செழித்து வளர்ந்த முல்லைக் கொடிகள், பற்களைப் போன்ற அரும்புகளைக் கொண்டுள்ளன.  அதன் காரணமாக நமது அழகு சிதையுமாறு கார்காலப் பருவமானது, நம்மை மிகவும் வருத்துகின்றது’ என்று, தலைவி சொன்னாள்.

 

 1. பாலை

 

பொறிகிளர் சேவல் வரிமரல் குத்த

நெறிதூர் அருஞ்சுரம்நரம் உன்னி – அறிவிட்(டு)

அலர்மொழி சென்ற கொடியக நாட்ட

வலனுயர்ந்து தோன்றும் மலை.                        5

தலைவன் பிரிந்து சென்ற பாலையில், கொண்டையுடைய காட்டுக் கோழிகள், மருள் செடிகளைக் கொத்துதலால், வழியானது தூர்ந்துவிடும்.  அதனால், வழி செல்வோர் கால்கள் துன்புறும்.  அத்தகு கொடு வழியை நினைத்தால், நமக்குத் துன்பம் மிகுகின்றது.  இரக்கமற்ற நெஞ்சங் கொண்ட நம் தலைவன், பீர்க்கங்கொடிகள் படர்ந்துள்ள மேற்கூரை கொண்ட பாழடைந்த வீடுகளில், கூர்மையான நகங்களையுடைய கரடிகள் சேர்ந்துறையும்.  இத்தகைய இடர்ப்பாடுகளையுடைய பாலையின் அரிய வழிச் செலவை எண்ணி, தலைவன் அத்தகைய வழிச் செலவை விட்டுவிட மாட்டானா?’ என்றாள் தலைவி.

 

 1. மருதம்

பேதையர் என்று தமரைச் செறுபவோர்

போதுறழ் தாமரைக்கண் ஊரனை நேர்நோக்கி

வாய்முடி யிட்டும் இருப்பஏர் மாண்ழாய்!

நோவதென் மார்(பு)யுஅறிம் இன்று.                  9

‘அழகிய மாட்சிமையுடைய அணிகலன்களையணிந்த தோழியே! அறிவிலியர் என்றெண்ணிச் சுற்றத்தினரைச் சினந்து கொள்வதோ?  அலரும் பருவத்து அரும்புகள் நிறைந்து கிடக்கும் தாமரைகள் செறிந்திருக்கும் நீர்நிலைகளைக் கொண்ட, வயலும் வயல் சூழ்ந்ததுமான மருதநிலத்துத் தலைவனை எதிர்கொண்டு, எதுபற்றியும் அவனைக் கேட்காமல், வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பதுவோ?  இதனை எண்ணி, நொந்துகொள்வதால் என்னதான் பயன்?  எனது நெஞ்சம் மட்டுமே, இன்றெனது துன்பத்தை உணருமென்பேன்.

 1. நெய்தல்

 

இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்

கடுமான் மணியவரம் என்று- கொடுங்குழை

புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர்

உள்ளரவம் நாணுவர் என்று.                                3

தலைவியின் காதலை அறிந்த பெற்றோர், அவளைக் காவலில் வைக்கின்றனர்.  அத்தகு காவலைக் கடந்தும், இரவுப் பொழுதில் தலைவன் தலைவியைச் சந்திக்கச் செல்வதாகப் பாடல் அமைவதாகும்.  அலைகளாலும், காற்றினாலும் பரப்பப்பட்ட மணல் திட்டுகளைக் கொண்ட கடற்கரைச் சோலைகளையுடைய துறைக்கு, தலைமகளைச் சந்திக்க வரும் தலைவனுடைய குதிரையின் கபத்தில் அணிந்துள்ள மணிகளின் ஓசையைக் கேட்டுத் தலைவியின் சுற்றத்தினர், தலைவனைக் கண்டுபிடித்து விடுவரோ எனத் தலைவி அஞ்சுகின்றான்.

 

 

 1. ஐந்திணை ஐம்பது

அறிமுகவுரை

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்திணைகளுக்குமாக ஐம்பது பாடல்களைப் பெற்றுள்ளமையால், ‘ஐந்திணை ஐம்பது’ என்பது பெயராயிற்று.  பாலை என்பது, நால்வகை நிலங்களுக்கும் பொதுவாதலாலும், உரிப்பொருளில் பிரிதல் ஒழுக்கத்துக்கு உரித்தாதலாலும் அதனையும் உடன்கொண்டு, ஐந்திணையாகக் கூறுதல் மரபாயிற்று.  பாலைத்திணையை நான்காவதாக, அஃதாவது ஈற்றயல் திணையாக வைத்து, இருத்தல் நிமித்தத்துக்குரிய முல்லையில் தொடங்கி, இரங்கல் நிமித்தத்துக்குரிய நெய்தலை ஈற்றில் அமைந்துள்ள வரிசை முறையானது சிந்தனைக்குரியது.

இந்நூற் பாடல்கள் சிறந்த நடையுடையனவாயும், பொருள் வளம் செறிந்தனவாயும் உள்ளன.  இந்நூலின் பாயிரச் செய்யுளானது, ‘ஐந்திணை ஐம்பதும், ஆர்வத்தின் ஓதாதார், செந்தமிழ் சேராதவர்’ என்கின்றது.  எனவே, செந்தமிழ்ப் புலமைக்கு, இந்நூற் பயிற்சி மிகவும் இன்றியமையாதது என்பது பெறப்படும்.

இந்நூலின் பாடல்களைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர், அகப்பொருள் விளக்க உரைகாரர் ஆகியோர், மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளனர்.

இந்நூலின் ஆசிரியர், மாறன் பொறையனார்.  இப்பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாகவும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாகவும் உள.  எனவே இவர், இவ்விருவர்க்கும் தொடர்புடையவராய் இருந்திருக்கலாம்.  பொறையனார் என்பது புலவர் தம் இயற்பெயரென்றும், மாறன் என்பது இவர்தம் தந்தையார் பெயரென்றும் கருதலாம்.  எனவே, ‘மாறன் மகனாராகிய பொறையனார்’ என்று கொளலாம்.

 1. முல்லை

அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி

மணிநிற மாமலைமேல் தாழ்ந்து – பணிமொழி !

கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்

பீர்நீர்மை கொண்டன தோள்.                                2

 

பருவங் கண்டழிந்த தலைமகள், தோழிக்குச் சொல்லியது என்றும் முறையிலமைந்த இம்முல்லைத்திணைப் பாடலில் தலைவி, மலையானது நீல மணி நிறத்தைப் போன்று உள்ளதாகவும், தலைவனைப் பிரிந்துவிடுவதால், தனது மேனியில் உண்டான பசலைநோயானது, பீர்க்கம்பூவின் தன்மையைக் கொண்டு, பொன்னிறமாக உள்ளதாகவும் தனக்குத் தெரிந்த உவமைப் பொருள்களாக எடுத்தாள்கின்றாள்.

 1. குறிஞ்சி

வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து

மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) – ஆங்(கு) எனைத்தும்

பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்

சேந்தனவாம் சேயரிக்கண் தாம்.                                       5

‘தலைவியின் கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன?’  எனக் கேட்ட செவிலித் தாய்க்குத் தோழியானவள் விடை கூறுகின்றாள்.  ‘நாங்கள் மலையும் மலை சார்ந்த இடங்களிலுமுள்ள வேங்கை மரங்களில் மலர்ந்துள்ள மணம் மிகுந்த பூங்காக்களைக் கொய்து, மாலை தொடுத்தோம்.  உழைப்பின் மிகுதியால் உடலானது வியர்க்கவும், நீர்நிலைக்குச் சென்று, வெகுநேரமாக விளையாடினோம்.  அதன் காரணமாகத் தலைவியின் கண்கள் செவ்வரி படர்ந்து காணப்படுகின்றன’.

 1. மருதம்

(தலைமகள், தோழிக்கு வாயில் மறுத்தது)

ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு

வல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் – நில்லென்னா(து)

ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும்

நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு.                             8

தலைமகள், தோழியிடம் வாயில் மறுத்துக் கூறியதாவது, ‘ஒளி வீசும் கண்களை உடைய தோழியே! ‘ஒல்லென ஓசை கொண்டு ஒலிக்கின்ற நீர்வளமும் நிலவளமும் உடைய மருதநிலத் தலைவனை எண்ணுகையில், என் மனமானது இறுகிவிடுகின்றது.  ஏக்கங்கொண்டு என் மகன் ஆங்கே நிற்பது கண்டும், நானே நிற்பது கண்டும் சற்றும் பொருட்படுத்தாமல், பரத்தையின் நட்பே இன்பமெனக் கருதிச் செல்கின்றான்.  என்னே அவனது இழி செயல்?’

 

 1. பாலை

(பிரிவின்கண் ஆற்றாலாயின தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது)

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக் – கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி.                              8

தலைவன் தலைவி உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இப்பாடல், ஒரு மானின் இணையின் மூலம் விளக்குகின்றது.  பாலை வழியில் ஒரு சுனையில், ஒரு மானுக்கே போதாத சிறிதளவு நீரே இருக்கின்றது.  அதைப் பருக, ஆண் மானும், பெண் மானும் வருகின்றன. இரண்டும் நீரில் வாய் வைக்கின்றன.  பிணைமான் தாகம் தணிய வேண்டும் என்றெண்ணிய கலைமான், பருகுவது போலப் பாவனை செய்கின்றது.  அதனைப் புரிந்து கொள்ளாத பிணைமான், தாகத்தைத் தணித்துக் கொள்கின்றது.  இத்தகைய உள்ளமொன்றிய பண்பு, விலங்கிடம் உள்ளதாகக் காட்டுவது உயர்ந்த நெறியாகும்.  ‘உடல் வேறாயினம் உளம் ஒன்றே’ என்பதுதான், காதலுள்ளம் படர வேண்டிய நெறி.

 1. நெய்தல்

(தோழிக்குத் தலைமகன் சொல்லியது, தோழற்குச் சொல்லிய தூஉம் ஆம்)

பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி

ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்

உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்

அணங்காகும் ஆற்ற எமக்கு.                                7

நெய்தல் நிலத் தலைவன், தன்னுடைய தோழர்க்குச் சொல்கின்றான்.  ‘பெரிய கடல் பரப்பு உள்ளெல்லாம் கலங்கும்படி, நுண்ணிய வலைகளையே வீசி, ஒருங்குடனே தமையன்மார் கொண்டு வந்த கொழுமீன் உணங்கலைக் கவர வரும் பறவைகளைத் துரத்தி ஓட்டுகின்ற, அழகிய ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த மகளிர், என்னை வருத்தும் தெய்வங்களாக உள்ளனர்.

குறிப்பு :  இப்பாடல், குறிஞ்சித் திணையில் மகளிர் திணைப்புனம் காத்தல் போல, நெய்தல் திணையில் மகளிர் மீன்களைக் காத்தல் செயலைச் செய்தனர் என்கின்றது.

 

– முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர்,

மொழி பெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு,

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *