BREAKING NEWS

உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் ஏலாதி ~ ஔவை ந.அருள்

ஏலாதி

பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ஏலாதி தன் ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளைத் தன்னகத்தே கொண்ட தனிச்சிறப்பு கொண்ட நூலாகும்.

அறிமுகவுரை

ஏலக்காயென்னும் ‘ஏலம்’ ஒரு மணப்பொருள்.  ‘ஏலாதி’ என்பது, ‘ஏலத்தை முதலாக உடையது’ என்பது பொருள்.  ஏலம் உள்ளிட்ட ஆறு பொருள்களின் கூட்டாகிய மருந்துதான் ஏலாதி என்பது.

ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவை ஆறு பொருள்கள்.  அவை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு மடங்கு அளவுகளுடன் சேர்ந்த மருந்து.  இந்நூலின் ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துகளைக் கொண்டது.  ஏலாதி மருந்தாகி உடலை வளர்ப்பது.  ஏலாதி நூலாகி உள்ளத்தை வளர்ப்பது.

கீழ்க்கணக்கில் ‘திரிகடுகம்’ ஒவ்வொரு பாடலும் மூன்று கருத்துகளைக் கொண்டது.  ‘சிறுபஞ்சமூலம்’ ஒவ்வொரு பாடலும் ஐந்து கருத்துகளைக் கொண்டது.  ‘ஏலாதி’யின் ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துகளைக் கொண்டது.  மூன்றுமே, மக்களின் உளநோயைப் போக்கின.

சிறுபஞ்சமூலத்தோடு ஏலாதி, பெரிதும் ஒற்றுமை உடையது.  இருநூல்களின் ஆசிரியரும் சமகாலத்தில் வாழ்ந்தவர் என்பதுடன், இருவருமே மாக்காயனாரிடம் தமிழ் பயின்றவரே.

ஏலாதியில் உடற்பயிற்சி செய்வது பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகின்றது.

“எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,

படுத்தலோடு, ஆடல் பகரின் அடுத்து உயிர்

ஆறு தொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர்

வேறு தொழிலாய் விரித்து’ (பா.69)

தம் உறுப்புகளை இயக்குதல், அவற்றை இயக்காது முடக்கல், நிமிரச் செய்தல், நிலைக்கச் செய்தல், படுக்க வைத்தல், ஆடவைத்தல் என்று உயர்ந்த அறிஞர்கள் உயிர் சார்ந்த உடம்பின் தொழில்கள் ஆறு என்று கூறியுள்ளனர்.

சங்க காலத் தமிழர்களின் வீரத்தையும், காதலையும், ஆட்சியியலையும், அறச்சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கும் தமிழ் இலக்கியங்கள், அவர்கள் செய்யும் உடற்பயிற்சி பற்றிய செய்திகளையும் எடுத்துக் கூறியிருக்கின்றன. போரும் வீரமும் நிறைந்திருந்த மன்னராட்சியில் போர் வீரர்களுக்கும், மல்லர்களுக்கும் குறைவு இருந்திருக்குமா என்ன? மல்லர்களும், போர் வீரர்களும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர். அப்படிப் பயிற்சி செய்வதை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “ஏலாதி’ செய்யுள் நமக்கு அறியத் தருகின்றது.

திரிகடுகம், சிறுபஞ்சமூலம் போலவே “ஏலாதி’ என்பது மருந்தின் பெயர்கொண்ட ஒரு நீதி நூல். ஏலம், இலவங்கம், நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்துப் பொருள்களின் கூட்டுக்கலவை உடல் நோயைக் குணப்படுத்துவது போலவே, ஏலாதியில் உள்ள செய்யுள்களில் ஆறு நீதிகளைக் கூறி, மன நோயைக் குணப்படுத்த முயன்றிருக்கிறார் அதன் ஆசிரியர் கணிமேதாவியார்.

ஏலாதியின் ஆசிரியர் ‘கணிமேதாவியார்’.  ‘கணிமேதையார்’ என்றும் வழங்கப்படுவார்.  கணிமேதை என்பதைக் கொண்டு, இவர் சோதிடக்கலையில் வல்லவர் என்றும் குறிப்பிடுவர்.  கடவுள் வாழ்த்தில் அருகதேவரை வாழ்த்தியுள்ளமையாலும், பாடல்களில் சமண சமய அறங்கள் உள்ளமையாலும் இவரைச் சமணரெனக் கொள்ளலாம்.  இல்லறம், துறவறம், சொல்லறம், வீட்டு நெறி ஆகியவை இந்நூலில் தொகுத்துரைக்கப்டுவன.  இந்நூலில், எண்பது வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு சில பாடல்களின் அருஞ்சுவை அறிவோம்.

 

கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த

அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,

மண்ணவர்க்கும் அன்றி, – மது மலி பூங் கோதாய்!-

விண்ணவர்க்கும் மேலாய்விடும்.        – 2

 

கொலையென்பதை விரும்பாதவன், எவ்வுயிரையும் கொல்லாதவன், புலாலுணவின் மீது மயக்கம் கொள்ளாதவன், எவ்வுயிர்க்கும் யாவர்க்கும் மிகுதுன்பத்தை விரும்பாதவன், எதற்காகவும் தன்னிலையினின்றும் தவறாதவன், தேன்நிரம்பிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்துள்ள மங்கையே மேற்கூறப்பெற்ற தகுதிமிகுதியுடையவன் மண்ணுலக மக்களுக்கு மட்டுமல்லாமல் விண்ணுலகத் தேவர்க்கும் மேலானவனாகி விடுவான்.

 

நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே,

பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,

வேய் அன்ன தோளாய்! – இவை உடையான் பல் உயிர்க்கும்

தாய் அன்னன் என்னத் தகும்.                     – 6

மூங்கில் போலும் அழகிய தோளுடையாய், மாட்சிமையுடைமை, மிகச் சிறந்த குணமுடைமை, ஈகைப்பண்புடைமை, பொறுமையுடைமை, பொய்மை புலாமை, புலாலுண்ணாமை என்னும் பண்புகளாம் இவற்றையெல்லாம் உடையவன், உயிர்கள் பலவற்றுக்கும் தாய் போன்றவன் என்று சொல்லத் தகுந்தவன்.

 

இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்;

வளமை, வலி, இவை வாடும்; உள நாளால்,

பாடே புரியாது, – பால் போலும் சொல்லினாய்!-

வீடே புரிதல் வீதி.                 21

பால் போன்ற தூய்மையும் இனிமையும் கொண்ட சொல்லையுடைவளே, வாழ்நாளில் இளமையோ கழிந்துவிடும்.  நோயும் முதுமையும் பொருந்திவிடும்.  வளமும் வலிமையும் ஆகியவை குன்றிவிடும்.  எனவே, மண்ணுலக ஒழுகலாற்றை விரும்பாமல், வீடுபேறு குறித்த விண்ணுலக ஒழுகலாற்றை விரும்புவதே நெறியாகும்.

 

சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது

மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண்

சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய்

வேறல் எளிது; அரிது, சொல்.     39

உயிர் துறப்பதென்பது எளிய செயல்.  பெருந்தன்மைப் பண்புடைமை என்பது அரிய செயல்.  நன்மையைப் பொருந்துதல் என்பது எளிய செயல்.  மெய்ம்மைப் பண்பைப் பாதுகாத்தல் என்பது அரிய செயல்.  நல்லதை நோக்கிச் செல்லுதல் என்பது எளிய செயல்.  ஆனால், அதில் நிலை நிற்றல் என்பது அரிய செயல்.  தெளிந்த அறிவினராய் வெல்லுதல் என்பது எளிய செயல்.  ஆனால், சொன்ன சொல்லைக் காப்பது என்பது அரிய செயல்.

 

குறுகான், சிறியாரை; கொள்ளான், புலால்; பொய்

மறுகான்; பிறர் பொருள் வெளவான்; இறுகானாய்,

ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின், நெறி நூல்கள்

பாடு இறப்ப, பன்னும் இடத்து.   41

கீழ்மக்களை எப்போதும் அணுகமாட்டான்.  தன்னுடம்பின் தசையைப் பெருக்கத்தான் எப்போதும் புலாலுணவைக் கொள்ளமாட்டான்.  பொய்ம்மையை எப்போதும் கடைப்பிடிக்க மாட்டான்.  அடுத்தவர் பொருளை ஒருபோதும் கவர்ந்துகொள்ள மாட்டான்.  உள்ளத்தில் எவ்விதக் கலக்கமுமின்றி வலிமையற்ற எளியவர்க்குப் பொருள் கொடுப்பானாயின் நன்னெறி நூல்கள் ஆராயுமிடத்து, அவன் பெருமையைப் பலவாறு பேசும்.

 

களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான்,

ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை

எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு

கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து. 46

உள்ளச் செருக்கினை ஒருபோதும் அடையமாட்டான்.  மயக்கந்தரும் கள்ளினை ஒருபோதும் உண்ணமாட்டான்.  கள்ளினை உண்டு மகிழ்வானை ஒருபோதும் காண மாட்டான்.  விருந்தினர் வந்தது கண்டு ஒருபோதும் ஓடியொளியமாட்டான்.  எப்போதுமே நிலைகுலையமாட்டான்.  ஏழை எளியவரை ஒருபோதும் எள்ளி நகையாடமாட்டான்.  உள்ளதை பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்பானாகில், துன்பமில்லாமல் இம்மண்ணக வாழ்வை வென்றுவிடுவான் என்பதோடு, நற்குடிச் சிறப்பையும் மிகப்பெறுவான்.

 

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான்

முடம்பட்டார் மூத்தார்மூப் பில்லார்க்(கு) – உடம்பட்(டு)

உடையராய் இல்லுள்ஊண் ஈத்துண்பார் மண்மேல்

படையராய் வாழ்வார் பயின்று.                                               53

கடன்பட்டவர், காதுகாப்பில்லாதவர், செல்வமில்லாதவர், தம்முடைய காலில் ஊனமுடையவர், அகவையில் முதிர்ந்தவர், முதிராதவர் ஆகிய அனைவர்க்கும் மனம் பொருந்தி இருப்பவராய், இல்லத்தில் உணவளித்துத் தாமும் உண்பவர், மண்ணுலகில் பரிவாரமுதுடையவராய்ப் பயனற்று வாழ்பவராவார்.

 

பெருமை புகழ்அறம் பேணாமை சீற்றம்

அருமைநூல் சால்பில்லார் சாரின் இருமைக்கும்

பாவம் பழிபகை சாக்காடே கேடச்சம்

சாபம்போல் சாருஞ் சலித்து.                                      60

பெருமிதமில்லாமல், புகழில்லாமல், அறத்தைச் செய்யாமல், சினங்கொண்டு, நூலறிவில்லாமல், சான்றாண்மை இல்லாரைச் சார்ந்தொழுகினால், இம்மை மறுமையாகிய இருமைக்கும் பாவம், பழி, பகை, துன்பம், அழிவு, அச்சம் ஆகியவை வினைப்பயனால் சாபம்போல் உறுதியுடன் வந்து சேரும்.

 

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்

நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)

எழுத்தின் வனப்பே வனப்பு.                                         74

உடலின் நடுவணதாகிய இடுப்பின் அழகும், வலிமை வாய்ந்த புயத்தின் அழகும், பெருமிதத்தின் அழகும், ஒழுகலாற்றின் அழகும், வெட்கப்படுதலின் அழகும், உடற்பகுதியாகிய கழுத்தின் அழகும் ஆகிய அவையெல்லாம் அழகுகளல்ல.  இரண்டு கண்களெனத்தகும் இலக்கிய இலக்கண நூல்களால் பெற்றுள்ள அழகே அழகாகும்.

 

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி

வாயிழந்த வாழ்வினார் வாணிகம் – போயிழந்தார்

கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க்(கு) ஈந்தார்

வைத்து வழங்கிவாழ் வார்.                                          78

பெற்ற தாயை இழந்த குழந்தை, கொண்டானாகிய கணவனை இழந்த மனைவி, வாக்கிழந்து வக்கற்ற வாழ்வினை உடையவர், வாணிகம் செய்யத் தொடங்கி வைத்த முதலையும் இழந்தவர், உண்ணும் பொருட்டுக் கைபவசம் வைத்திருந்த பொருளினை இழந்தவர், கண்பார்வை இல்லாதவர் ஆகியோர்க்கெல்லாம் ஈகையை மேற்கொள்வர், பொருளீட்டிக் காத்து வகுத்து வளமுற வாழ்பவராவார்.

 

 

 

– முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர்,

மொழி பெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

 

 

 

 

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *