- செய்திகள், விளையாட்டு

உச்சநீதிமன்றத்தில் மும்பை கிரிக்கெட் சங்கம் மனு தாக்கல் ஐபிஎல் போட்டிகளை மாற்ற உத்தரவிட்ட விவகாரம்

மும்பை, ஏப்.23:-

மகாராஷ்டிர மாநிலத்தில் நடத்த திட்டமிட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து மும்பை கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தில் நடக்க திட்டமிட்டிருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பின் மகாராஷ்டிரத்தில் நடக்க இருந்த 13 போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி புனே அணியின் 4 ஆட்டங்கள், மும்பை அணியின் 3 ஆட்டங்கள், பஞ்சாப் அணியின் 3 ஆட்டங்கள்,  இரண்டு பிளே-ஆப் ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவற்றை மகாராஷ்டிரத்தில் இருந்து மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இருப்பினும் மே 1-ம் தேதி புனேயில் நடக்க இருந்த புனே-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த மட்டும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனிடையே மும்பை கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்ககல் செய்துள்ளது. அந்த மனுவில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு குடிதண்ணீர் பயன்படுத்தப்படப் போவதில்லை என்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர்தான் பயன்படுத்தப்பட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் இந்த  மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 25-ம் நடைபெற உள்ளது.

முன்னதாக மாநிலத்தின் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு முதல் அமைச்சரின் வறட்சி நிவாரண நிதிக்காக தலா ரூபாய் 5 கோடி தர மும்பை, புனே நிர்வாகங்கள் ஒப்புக் கொண்ட நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply