- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

`உங்கள் சொந்த இல்லம்' திட்டத்தின் கீழ் ***காவல் துறையினருக்கு கட்டப்பட்ட 2673 வீடுகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, பிப்.25-

மொத்தம் ரூ.754 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போலீஸ் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் "உங்கள் சொந்த இல்லம்"  திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள  2673 வீடுகளை திறந்து வைத்த அவர், வீடுகளுக்கான சாவிகளை போலீசாருக்கு வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
போலீசாருக்கு சொந்த வீடு
போலீசார் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு சொந்த வீடு கிடைத்திடும் வகையில், "உங்கள் சொந்த இல்லம்" திட்டத்தின் கீழ், காவல் துறையில் போலீசார் முதல் டி.எஸ்.பி.க்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்போர் முதல் கோட்ட அலுவலர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலமாக சொந்த வீடு கட்டித் தரும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து, அக்கழகத்தின் மூலம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

2673 குடியிருப்புகள்

அதன்படி, முதற்கட்டமாக 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேலக்கோட்டையூரில் 2,673 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, மேலக்கோட்டையூரில்  47.60 ஏக்கர் நிலத்தில், 20,50,150 சதுர அடி கட்டிட பரப்பளவில் ரூ.459.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2673 வீடுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். அவ்வீடுகளை சீருடைப் பணியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 14 சீருடைப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு  வீடுகளுக்கான சாவிகளை அவர் வழங்கினார். அப்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, "புதிய இல்லத்தில் வளத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும்" என்று வாழ்த்தினார்.
வசதிகள்
இப்புதிய குடியிருப்புகளில், டி.எஸ்.பி.க்கள் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு 1100 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய 166 வீடுகள், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு 850 சதுர அடி கட்டிட பரப்பளவில் 1190 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், போலீஸ், தலைமைக் காவலர் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு 650 சதுர அடி கட்டிட பரப்பளவில் 1317 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்குடியிருப்புகளில் லிப்ட், மழைநீர் சேகரிப்பு வசதிகள், தீயணைப்பு உபகரணங்கள், இடிதாங்கி வசதி, வாகன நிறுத்துமிடம், சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்கு, கான்கிரீட் சாலைகள், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1794 காவல் துறை குடியிருப்புகள்
மேலும், சென்னை, கடலூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரூ.202.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1794 காவல் துறை குடியிருப்புகள். ரூ.13.47 கோடி மதிப்பீட்டில் 23 காவல் நிலையங்களுக்கு  புதிதாக கட்டப்பட்டுள்ள சொந்தக் கட்டிடங்கள், அரியலூரில் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், டி.எஸ்.பி.க்களுக்கு குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம், ஆயுதப்படை நிர்வாகக் கட்டிடங்கள், கடலோரக் காவல் நிலையங்கள், காவலர் மருத்துவமனைகள், மதுரை மாநகர காவல் அலுவலகம், தஞ்சாவூரில் மாவட்ட காவல் அலுவலகம், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடிகள், என ரூ.43.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 காவல் துறை கட்டிடங்கள். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் தனி கிளை சிறைக்கு கூடுதல் கட்டிடம், காஞ்சிபுரம் மாவட்டம்  மாவட்ட சிறையாக தரம் உயர்த்தப்பட்ட செங்கல்பட்டு கிளைச் சிறை, என  ரூ.14.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 சிறைத் துறைக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ெஜயலலிதா திறந்துவைத்தார்

மேலும் சென்னை எழும்பூரில் ரூ.5.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அலுவலகக் கட்டிடம்,  சென்னை – ஆலந்தூரில் ரூ.11 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை  இயக்கக கட்டிடம் என மொத்தம் ரூ.753.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி. அசோக்குமார், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply