- அரசியல் செய்திகள்

ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

ஈரோட்டில் நேற்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் பங்களாப்புதூர் அடுத்து புஞ்சை துரையம் பாளையத்தில் உள்ள சத்தியமங்கலம்-அத்தாணி தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது.

இதற்காக அங்கு பிரம்மாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் விழா நடைபெறும் இடம் முழுவதும் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போராரு என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை பெற்று கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது அங்கு இருந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்து அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். பெண்கள் ஆர்வத்துடன் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொண்டனர். முன்னதாக மு.க.ஸ்டாலின் வந்ததும் ஸ்டாலின் தான் வாராரு என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இந்த பிரசார கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்று மேடையில் அமைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டார். மனு கொடுத்த அனைவருக்கும் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.

பொதுமக்கள் கொடுத்த மனுக்களில் இருந்து சில மனுக்களை எடுத்து மனு கொடுத்தவர்களை பேச அழைத்தார். அப்போது அவர்களது கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களின் கோரிக்கை 100 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்று பேசினார்.

பின்னர் மனுக்கள் போடப்பட்ட பெட்டியை பொதுமக்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் பூட்டி சீல் வைத்தார்.

Leave a Reply