- உலகச்செய்திகள், செய்திகள்

ஈரான் விமான நிறுவனத்துக்கு சவூதி அரேபியாவில் தடை விதிகளை மீறி பறந்ததால்

ரியாத், ஏப். 6:- ஈரானை சேர்ந்த தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள், சவூதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உறவில் விரிசல்

ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஈரானுக்கும், சன்னி முஸ்லிம்கள் பெருவாரியாக இருக்கக்கூடிய சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவில் நீண்டகாலமாக விரிசல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சவூதி அரேபியாவில் ஷியா பிரிவின் மதகுரு நிம்ரு அல் நிம்ருவுக்கு மரண தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றினர். இந்த சம்பவம் ஈரான் மக்களிடத்திலும், அரசிலும் சவூதி மீது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவும் தடைபட்டுப் போனது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்தில் தடை ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஈரானின் பிரபல தனியார் விமான நிறுவனான ‘மஹான்’-ன் விமானங்கள், சவூதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணம்
இதுகுறித்து, சவூதியின் விமானப்போக்குவரத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஈரானின் மஹான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் சவூதியில் தரை இறங்குவதற்கும், இங்கிருந்து செல்வதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மஹான் விமானங்கள் விதி மீறலில் ஈடுபட்டதாலும், சர்வதேச விமானங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மஹான் விமானங்கள் எப்போது, எந்த மாதிரியான விதி மீறலில் ஈடுபட்டது என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

Leave a Reply