- உலகச்செய்திகள், செய்திகள்

ஈராக் குண்டுவெடிப்பில் பலி 73 ஆக உயர்ந்தது ‘‘நாங்கள்தான் செய்தோம்- ஐ.எஸ்’’

பாக்தாத், மார்ச்.1-
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து உள்ளது. நூற்றுக்கணக்கானோர் உடலில் பயங்கர காயங்களுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்கொலைப் படை தாக்குதல்

ஈராக் நாட்டின் ஷிர்ட்டி மாவட்டம் சாதர் நகரத்தில் மிர்ரெடி சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆள் நாட்டம் எப்போதுமே அதிகளவு இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் சந்தைக்குள் புகுந்தான்.
பின்னர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் சந்தையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர். பலர் உடல் சிதறிய நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
73 பேர் பலி

சம்பவம் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக் குழுவினர், உயிருக்கு போராடிய அனைவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிலர் ஆஸ்பத்திரியிலே இறந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐ.எஸ். பொறுப்பேற்பு

இந்த கொடூரத் தாக்குதலுக்கு உலகை அச்சுறுத்தும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்று உள்ளனர். பொதுமக்கள் மீதான இந்த கோழைத்தனமான தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தோல்வியை காட்டுவதாக ஈராக் பிரதமர் ஹய்தர்-அல்- அபடி கூறியுள்ளார்.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கின்றனர். இவர்களை அழிக்கும் நோக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த காலங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மட்டும் (நேற்று முன்தினத்தையும் சேர்த்து) இதுவரை 92 பேர் இறந்து உள்ளனர்.

Leave a Reply