- செய்திகள்

இலங்கை சிறையில் வாடும் மீதமுள்ள மீனவர், படகுகளை மீட்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை…

சென்னை, ஜூலை. 27-
இலங்கை சிறையில் வாடும் மீதமுள்ள மீனவர், படகுகளை மீட்க வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது தொடர்பாக, பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ம.க.வின் நோக்கம்
இலங்கையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 49 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் விடுதலை அவர்களின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்திருக்கும் என்பதில் எந்த ஐயமில்லை. ஆனால், இந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் அனைத்து மீனவர்கள் குடும்பங்களுக்கும் ஏற்பட வேண்டும்; அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கமும், விருப்பமும், கோரிக்கையுமாகும்.
77 மீனவர்கள், 102 படகுகள்
மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த மே மாதம் 30-ந் தேதி முதன்முறையாக தமிழக மீனவர்களில் மீன்பிடிக்கச் சென்ற போதே சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 15-ந் தேதி வரை மொத்தம் 77 மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்தனர். அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 102 மீன்பிடி விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனினும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரை கூறி வருகின்றனர். மீனவர்களை விடுதலை செய்துவிட்டு அவர்களுக்கு சோறு போடும் படகுகளை பறிமுதல் செய்து வைப்பது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து உயிருடன் கொல்வதற்கு சமமானதாகும்.
வாழ்வாதார பாதுகாப்புக்கு…
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டுமெனில், இலங்கை அரசுடன் செய்து கொண்ட படகுகள் பறிமுதல் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.  மத்திய அரசுக்கும், மீனவர்களுக்கும் 29-ந் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பேச்சுக்களில் தமிழக அரசும் பங்கேற்று இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply