- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்

சென்னை, மார்ச்.26-

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–-

படகுகள் பறிமுதல்

இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 40 பேரின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 4–-ந் தேதி வரை நீடித்து அந்நாட்டு நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 96 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை நீதிமன்றத்தின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 104 தமிழக மீனவர்கள் பொங்கல் திருநாளில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதற்கு அடுத்த நாளில் இருந்தே வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடங்கி விட்டது.

கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மீனவர்களுக்கு சொந்தமான 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. மார்ச் மாதம் 1–ந் தேதி முதல் 13-–ந் தேதி வரையிலான 13 நாட்களில் மட்டும் 69 மீனவர்களும், அவர்களுக்கு சொந்தமான 11 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

96 மீனவர்கள்

தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதற்கு இந்திய அரசே துணைப்போவது கொடுமையாகும். வேறு எந்த நாட்டிலும் மீனவர்களுக்கு இப்படி ஓர் அநீதி இழைக்கப்படாது. இந்த அநீதிகளை தடுக்கும் கடமை நரேந்திர மோடி அரசுக்கு தான் உள்ளது.

எனவே, தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக்கொள்ள இலங்கை அரசுக்கு அனுமதி அளித்து செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 96 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட 82 படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply