- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 94 படகுகளை மீட்க வேண்டும்.

சென்னை, ஏப்.7-
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்த 94 படகுகளை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அராஜகம்
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படை நமது மீனவர்களை தாக்குவதும், சிறைப் பிடிப்பதும், மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்துவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
நீண்ட காலமாக இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருந்த 99 தமிழக மீனவர்களை இலங்கை அரசு தற்போது விடுதலை செய்துள்ளது. அதே நேரத்தில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 94 படகுகளை இன்னும் விடுவிக்காமல் இருப்பது இலங்கை அரசின் நாடகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே மத்திய அரசு இலங்கை அரசின் இரட்டைவேடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக மீனவர்களின் 94 படகுகளையும்  ஒப்படைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அப்படகுகளுக்கான நிவாரணத் தொகை முழுவதையும் மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும்.
வாக்குறுதி
தற்போது மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசு இலங்கைக்கு படகுகளையும், மீன்பிடிக் கருவிகளையும் வழங்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது போன்ற உதவிகளை செய்வதற்கு முன், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கக்கூடாது, படகுகளை பறிமுதல் செய்யக்கூடாது என்பதை இலங்கையிடம் உறுதி பெற்ற பிறகே அந்நாட்டிற்கு மீன்பிடி படகுகளும், மீன்பிடிக் கருவிகளும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply