- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள், 69 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, பிப்.2-
‘இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் உள்பட  தமிழக மீனவர்கள் 15 பேரையும், 69 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் மீனவர்கள் பிடித்துச்செல்லும் நிலை

தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்துச்செல்வது குறித்து மீண்டும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு நான் உள்ளாக்கப்பட்டுள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி மாலையில் பிடிக்கப்பட்டு, அவர்களின் படகுகளுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நான் விடுத்த தொடர் கோரிக்கைகளாலும், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளாலும் கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள மீனவ சமுதாய மக்களிடையே பெரும் வேதனையும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும், உபகரணங்களையும் புதுப்பித்து, தமிழக மீனவர்களிடம் விரைவில் வழங்க வேண்டும்.
பாரம்பரிய மீன்பிடி உரிமைகள்
கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட அரசியல் சட்டத்திற்கு விரோதமான உடன்பாடுகள் செல்லாததாக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் விரைவில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது. இந்த உடன்பாடுகள் அரசியல் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
பாக் நீரிணையில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொள்ள வசதியாக ‘துனா’ ரக ஆழ்கடல் மீன்பிடி படகுகளையும், உபகரணங்களை வாங்கவும் தமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகவும், கட்டமைப்பு வசதிகளுக்காகவும், ரூ.1520 கோடி நிதியுதவியும், ஆண்டுதோறும் கடற்பகுதியை ஆழப்படுத்துவதற்காக ரூ.10 கோடி மானியமும் மத்திய அரசு வழங்க வேண்டும் என, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதியும் தங்களிடம் நான் நேரில் அளித்த மனுக்களில் வலியுறுத்தி இருந்தேன். தமிழகத்தின் இந்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இலங்கை கடற்படையினர் மற்றும் அதிகாரிகள், நமது மீனவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் கொடூரத் தாக்குதல்களைத் தடுக்க நீங்கள் தனிப்பட்ட முறையில், இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள 9 மீனவர்கள் உள்பட இலங்கை அரசின் பிடியில் உள்ள 15 மீனவர்களையும், 69 படகுகளையும் உடனடியாக விடுவிக்க, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு, நீங்கள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply