- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 64 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, மார்ச் 8-
இலங்கைக் கடற்படையால் நேற்று பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேர் உட்பட அந்நாட்டில் காவலில் உள்ள 64 மீனவர்களையும், 77 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க, பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இருவேறு சம்பவங்களில்
தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் செல்வது தங்குதடையின்றி தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 6-ந் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களையும், அவர்களது 4 படகுகளையும், இலங்கைக் கடற்படையினர் இருவேறு சம்பவங்களில் பிடித்துச் சென்றுள்ளனர். முதலாவது சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு, இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில், தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீன்பிடித்தளத்தில் இருந்து, 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் சென்ற 15 மீனவர்களும், மோட்டார் பொருத்தப்பட்ட மற்றொரு நாட்டுப் படகில் சென்ற 5 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு, இலங்கையில் உள்ள கல்ப்பிட்டியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நிரந்தரத் தீர்வு
பாரம்பரிய பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வுரிமையும், வாழ்வாதாரமும், இலங்கைக் கடற்படையினர், அப்பாவி தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வது, தாக்குவது, துன்புறுத்துவது போன்ற செயல்களால் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன. கச்சத்தீவை மீண்டும் இந்தியாவின் இறையாண்மைக்குக் கீழ் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்பதுதான் தமிழக அரசின் தொடர்ச்சியான நிலைப்பாடு. இதன்மூலம், தமிழக மீனவர்கள், தங்களது பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையைப் பாதுகாக்க முடியும்.
1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்பாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானவை என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்தியா-இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லை என்பது, தற்போது நீதிமன்ற விசாரணையின் கீழ் உள்ளது.
நேரடியாகத் தலையிட்டு…
இலங்கை அரசு, மீனவர்களை விடுவித்த பின்னரும், அவர்களின் படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் திரும்ப ஒப்படைக்காமல் இருப்பது, ஏராளமான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக மீனவ சமுதாயத்தினர் பெரும் வேதனைக்கும் விரக்திக்கும் உள்ளாகியுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகுகளை நீண்டகாலமாக இலங்கையில் நிறுத்தி வைத்திருப்பதாலும், இப்படகுகள் நீண்டநாட்களாக உபயோகப்படுத்தப்படாமல் உள்ளதாலும், கடுமையான பருவ மாற்றங்களாலும் சீரமைக்க முடியாத வகையில் சேதமடைந்துள்ளன. எனவே, இந்த படகுகளை புதுப்பித்து, அவற்றையும், மீன்பிடி உபகரணங்களையும் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், கடத்திச் செல்லப்படுவதையும் உடனடியாக தடுக்க ஏதுவாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதற்காக, இந்திய அரசு உயர்மட்ட அளவில் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். இதன்மூலம், இந்த உணர்வுப்பூர்வமான, பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.

உடனடி நடவடிக்கை

உடனடி நடவடிக்கையாக, பிரதமர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, நேற்று பிடித்துச் செல்லப்பட்ட 29 மீனவர்கள் உள்பட இலங்கையில் காவலில் உள்ள 64 தமிழக மீனவர்களையும், 77 மீன்பிடிப் படகுகளையும் மீட்பதற்காக, இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பிரச்னைக்கு, மிகுந்த முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடிதத்தில் கூறியிருக்கிறார்.

Leave a Reply