- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

இலங்கை அரசை கண்டித்து இன்று நடத்தப்படும் மீனவர்கள் போராட்டத்தில் த.மா.கா. பங்கேற்கும்

சென்னை, பிப்.29-
இலங்கை அரசை கண்டித்து இன்று (திங்கட்கிழமை)நடத்தப்படும் மீனவர்களின் போராட்டத்தில் த.மா.கா. பங்கேற்கும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோரிக்கைகள்
அன்றாடம் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அச்சுறுத்துவது, தாக்குவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபடுவதால் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இலங்கை கடற்படையின் இத்தகையப் போக்கை தடுத்து நிறுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
மேலும் தமிழக மீனவர்கள் தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்த சுமூகத் தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக பல நேரங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மேற்கொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
த.மா.கா. ஆதரவு
இந்தநிலையில் மீனவச் சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கை அரசு, இலங்கை சிறையில் உள்ள 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்திட வேண்டும், மீனவர்களது 79 படகுகளையும் உரிய மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், பழுதடைந்த படகுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சென்னையில், இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) நடத்துகிறார்கள்.
த.மா.கா.பங்கேற்பு
தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை அரசை கண்டித்து நடத்த இருக்கின்ற இப்போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணியினர் கலந்து கொள்கிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கொடுக்கின்ற வகையில் நிரந்தர, சுமூக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் மீனவர்களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply