- செய்திகள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை(2 காலம்) ஐ.நா.வுக்கு வைகோ வலியுறுத்தல்…

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வுக்கு வைகோ கோரிக்ைக வைத்துள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

படுகொலை

2009 ஏப்ரல் மே திங்களில் சிங்கள இனவாத அரசு நடத்திய தமிழ் இன அழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தாத அப்பாவித் தமிழர்கள், தாய்மார்கள், முதியோர்கள், குழந்தைகள் உட்பட ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையை, ஐ.நா. பொதுச் செயலாளர் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, ஆதார சாட்சியங்களோடு அறிக்கையாகத் தந்தது.

கோரிக்கை

நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட 107 விடுதலைப்புலிகள் குறித்தும், அத்தகைய உயிர் ஆபத்தில் சிக்கி இருக்கின்ற போராளிகள் குறித்தும், காணாமல் போனவர்கள் கதி என்ன என்பதை அறியும் வகையிலும், அனைத்துலக அமைப்புகளான ஐ.நா. மன்றமும், செஞ்சிலுவைச் சங்கமும், மனித உரிமைகள் கவுன்சிலும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு,  இந்திய அரசின் வெளியுறவுத் துறை மூலம் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கொழும்புக்குச் செல்கிறார். முன்னர் இவர் அங்கே சென்றபோது என்ன ஏமாற்று வேலைகளைச் செய்தார்களோ, அதைத்தான் இப்போதும் செய்யப் போகின்றார்கள். சிங்கள அரசின் மோசடி நாடகத்திற்குத் துணைபோகாமல், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடைபெறுவதற்கும், காணாமல் போனவர்கள் குறித்துத்தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்ற வகையில் பான் கி மூன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply