- செய்திகள், மாநிலச்செய்திகள்

இலங்கையில் தனி தமிழ் ஈழம் கேட்டு ‘பிரபாகரன் இல்லாமல் மீண்டும் போர் தொடங்க முடியாது’

கொழும்பு, ஏப்.7:-

இலங்கையில் தனித் தமிழ் ஈழம் கேட்டு பிரபாகரன் இல்லாமல் மீண்டும் போர் தொடங்க முடியாது என்று வடக்கு மாகாண சபை தலைவர் தெரிவித்தார்.

ஆயுதப் போராட்டம்
இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டு பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பு சுமார் 30 ஆண்டு காலம் சிங்கள ராணுவத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு மே 18-ந் தேதி அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனுடைய உடல் கண்டெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன்பின்னர், அந்த நாட்டில் சொல்லிக் கொள்ளும் படியான எந்தவிதமான மோதல் சம்பவங்களும் நடைபெறவில்லை.

சிங்களர்கள் அச்சம்
இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் 30-ந் தேதி போர் மும்முரமாக நடைபெற்று வந்த வடக்குப் பகுதியில் உள்ள சாவகச்சேரியில், ஒரு வீட்டில் இருந்து தற்கொலைப் படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஜாக்கெட் ஒன்று, 12 கிலோ எடையுள்ள டி.என்.டி. வெடிமருந்து அடங்கிய 3 பொட்டலங்கள், 9 எம்.எம். பிஸ்டலுக்கு பயன்படுத்தப்படும் 100 தோட்டாக்கள் அடங்கிய 2 பார்சல்கள் மற்றும் சில சார்ஜர்கள், பேட்டரிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இதனால் அந்த நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெற்று வந்து தனி நாடு போராட்டத்தை தொடங்கி விடக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதுபற்றி அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த ஜி.எல்.பீரிஸ், ‘‘அந்த வெடிபொருட்கள் அனைத்தும் புதியவை என்று மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அரசு கண்டிப்பாக உண்மையை வெளியே சொல்ல வேண்டும்’’ என்று கேட்டிருந்தார்.

பிரபாகரன் இல்லாமல்…

அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று வடக்கு மாகாண சபைத் தலைவரும், பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.வி.கே.சிவஞானம் கூறுகையில், ‘‘பிரபாகரன் இல்லாமல் இலங்கையில் தனித் தமிழ் ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் அமைப்பால் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை (போர்) புதுப்பிக்க முடியாது. தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் பழமையானவை. போர் முடிவடைந்த 7 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போதுதான் அவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்’’ என்று கருத்து தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகள் தனி நிர்வாகம் நடத்தி வந்தபோது, யாழ்ப்பாணத்தில் மத்திய அரசின் முக்கிய நிர்வாகியாக சி.வி.கே.சிவஞானம் இருந்தார். தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ள இவர், கடந்த 2013-ம் ஆண்டில் வடக்கு மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
——————

Leave a Reply