- செய்திகள், விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் மகளிர் கிரிக்கெட் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ராஞ்சி, பிப்.23:-

இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

இதையடுத்து களம் புகுந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர்களாக  மிதாலி ராஜும் வனிதாவும் களம் இறங்கினர். இந்திய அணி 14 ரன்கள் எடுத்த நிலையில் வனிதா ஆட்டமிழந்தார். இவர் 12 ரன்களே எடுத்த நிலையில் பெவிலியின் திரும்பினார். இதையடுத்து மந்தனா களம் புகுந்தார்.  இதையடுத்து மேலும் ஒரு ரன்கள் கூடிய நிலையில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ஆட்டமிழந்தார். இவர் எடுத்த ரன்கள் வெறும் 3 ரன்களே ஆகும். மிதாலி ஆட்டமிழந்த பின் கௌர் களம் புகுந்தார்.

மந்தனாவும் கௌரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் மந்தனா ஆட்டமிழந்தார். இவர் 35 ரன்கள் எடுத்தார். இவர் எடுத்த இந்த ரன்களில் 4 பவுண்டரிகளும் அடங்கும். மந்தனாவைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி களம் புகுந்தார். இவரும் கௌரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 17 ரன்கள் சேர்த்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

இந்த நிலையில் அனுஜா பாட்டீல் களம் புகுந்தார். அனுஜாவும் கௌரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 6 ரன்களே சேர்த்தனர். இந்த நிலையில் கௌர் இந்திய அணியின் அதிகபட்சமான 36 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இவர் ஆட்டமிழந்தவுடன் பிஸ்ட் களம் புகுந்தார். இவரும் அனுஜாவும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 24 ரன்கள் சேர்த்தனர். இந்த நிலையில் பிஸ்ட் ஆட்டமிழந்து வெளியேற  பாண்டே அனுஷாவுடன் இணைந்தார். இவர்கள் இணைந்து 7 ரன்கள் சேர்த்த நிலையில் இந்திய அணியின் 20 ஓவர்கள் முடிவுறவே அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டு இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.

இலங்கை அணியின் குமாரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 131 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய அணி இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணியில் சுரங்கிகா ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார்.

இந்திய வீராங்கனை அனுஜா பாட்டீல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியை அடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply