- செய்திகள், மாநிலச்செய்திகள்

இலக்கை காட்டிலும் கொள்முதல் அதிகமாக இருந்தாலும் 8,500 டன் பருப்பு இறக்குமதியாகிறது

புதுடெல்லி, மார்ச்.8:-

8,500 டன் பருப்பு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரீப் பருவத்தில் பருப்பு கொள்முதல் இலக்கை காட்டிலும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆய்வு கூட்டம்

நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் சி. விஸ்வநாத் தலைமையில், அத்தியாவசியமான பொருட்கள் விலை, கிடைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பருப்பு கையிருப்பு, தக்காளி உற்பத்தி நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நுகர்வோர் விவகாரங்கள் துறை, வேளாண், வர்த்தக, எப்.சி.ஐ., எம்.எம்.டி.சி., என்.ஏ.எப்.இ.டி. உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் பருப்பு இறக்குமதி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது 8,500 டன் பருப்பு இறக்குமதி செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பருப்பு விலையை நிலையாக வைத்திருக்கும் நோக்கில் கையிருப்ைப அதிகரிக்கும் நோக்கில் நடப்பு 2015-16 வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்) கரீப் பருவத்தில் 50 ஆயிரம் டன்னும், ராபி பருவத்தில் 1 லட்சம் டன்னும் பருப்பு கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

51 ஆயிரம் டன்

கடந்த கரீப் பருவத்தில் (ஜூன்-அக்டோபர்) 51 ஆயிரம் டன் பருப்பு கொள்முதல்  செய்யப்பட்டுள்ளது. இது அந்த பருவத்தில் கொள்முதல்  செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் ஆயிரம் டன் அதிகமாகும். மேலும், இதர ராபி பருவ பருப்பு ரகங்களும் கொள்முதல் செய்ய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகம், வேளாண் கூட்டுறவு நபாட், சிறு விவசாயிகளின் வேளாண் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவை பருப்பு கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

உற்பத்தி

நடப்பு வேளாண் பருவத்தில் 1.73 கோடி டன் பருப்பு உற்பத்தியாகும் என  மதிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் உள்நாட்டில் பருப்பு தேவை 2.30 கோடி  டன் என்ற அளவில் உள்ளது. இதனால் பற்றாக்குறை இறக்குமதி வாயிலாக பூர்த்தி  செய்யப்படும்

இந்த வேளாண் பருவத்தில் தக்காளி உற்பத்தி 11.6 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply