- செய்திகள், மாநிலச்செய்திகள்

இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு 352 ரூபாய் வீழ்ச்சி மகிழ்ச்சியில் மக்கள்

சென்னை, பிப்.16:-
தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் வீழ்ச்சி கண்டது. தங்கம் பவுனுக்கு 352 ரூபாய் குறைந்தது. விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீடிக்கவில்லை
தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கம் முதல் ஏறுமுகத்தில் இருந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று தங்கத்தின் விலை இறங்கியது. ஆனால் இந்த விலை உயர்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை. சென்ற வெள்ளிக்கிழமையன்று மீண்டும் விலை உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் பவுனுக்கு 920 ரூபாய் உயர்ந்தது.
திருமண சீசன் காரணமாக தங்கத்துக்கான தேவை அதிகமாக உள்ள நிலையில் விலை உயர்ந்தது மக்களை கவலையில் ஆழ்த்தியது. இருப்பினும் அதற்கு அடுத்த நாள் (சனிக்கிழமை) தங்கத்தின் விலை பவுனுக்கு 184 ரூபாய் சரிந்தது. இது அவர்களுக்கு சிறிது ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
536 ரூபாய் குறைந்தது
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று அதிகரித்ததால் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது. தங்கம் பவுனுக்கு 352 ரூபாய் சரிந்தது. கடந்த 2 வர்த்தக தினங்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு 536 ரூபாய் வீழ்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 701 ரூபாயாக சரிந்தது. இது, நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 745 ரூபாயாக இருந்தது. தங்கம் பவுனுக்கு 352 ரூபாய் வீழ்ந்து 21 ஆயிரத்து 608 ரூபாயாக குறைந்தது. கடந்த சனிக்கிழமையன்று இது 21 ஆயிரத்து 960 ரூபாயாக இருந்தது.
வெள்ளி
வெள்ளியின் விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 40 ரூபாய் 20 காசுகளாகவும், கிலோவுக்கு 940 ரூபாய் சரிந்து 37  ஆயிரத்து 585 ரூபாயாகவும் வீழ்ந்தது.

Leave a Reply