- செய்திகள், தேசியச்செய்திகள்

இரும்பு திரை விலகுகிறது கியூபாவில் இங்கிலாந்து குழுவின் மாபெரும் `ராக்' இசை நிகழ்ச்சி 5 லட்சம் மக்கள் பங்கேற்பு

ஹவானா, மார்ச் 28-
கியூபாவில் நடந்த இங்கிலாந்து ராக் இசைக்குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிக பெருமக்கள் கலந்து கொண்டனர். காலம் மாறுவதை இது காட்டுகிறது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கியூபா

கியூபா கரீபியன் தீவுகளில் அதிக மக்கள் வசிக்கும் ஓர் அழகிய தீவு. ‘‘அடைந்தால் தாய்நாடு, இல்லையேல் மரணம்’’ என்ற முழக்கத்துடன் 1902-ல் அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது. மாபெரும் புரட்சியை முன்னின்று நடத்தி, பொதுவுடமை கொள்கையை ஏற்று 1959-ல் பிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்தார். இதைத் தொடர்ந்து கியூபாவுக்கு எதிாக
அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
கம்யூனிசம்
கியூபா ஏழ்மையில் உச்ச நிலைக்கு சென்றது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு படையெடுத்தனர். தொடர்ந்து அகதிகள் வருகை அதிகரிக்கவே அமெரிக்கா அந்த வழியையும் அடைத்தது. இவ்வாறான பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், இன்று உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் நிலையில் உள்ளது.
100 சதவீத கல்வியறிவு, சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எனினும் மிகுந்த கட்டுப்பாடு மிக்க நாடு. கம்யூனிச சித்தாந்தங்களை கடைபிடிக்கும் மக்கள் இங்கு அதிகம். இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்களுக்கு இங்கு கடும் கட்டுப்பாடு உண்டு. கடந்த 1962-ல் லண்டன் மாநகரில் ‘‘ரோலிங் ஸ்டோன்ஸ்’’ இசைக் குழு ஆரம்பிக்கப்படுகிறது.
இசைநிகழ்ச்சி

இந்த குழு கியூபாவில் 1968-ம் ஆண்டு முதல் முதலாக ஒரு இசை பாடலை ஒலிப்பதிவு (ஆடியோ) செய்தது. இந்த பாடல் பலருக்கு பிடித்திருந்த போதிலும், திருட்டு தனமாகதான் இசை தட்டுகளை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கியூபாவுக்கு சென்றார்.
அமெரிக்க அதிபர் ஒருவர் 88 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு செல்வது இதுதான் முதல் முறை. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் ரோலிங் ஸ்டோன்ஸ் இசை குழுவினர் தலைநகர் ஹவானாவில் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
5 லட்சம் பேர் பங்கேற்பு

இதில் அரை மில்லியன் பேர் (சுமார் 5 லட்சம்) திரளாக வந்து கலந்து கொண்டனர். திறந்த வெளியில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை பிரமாண்ட திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்தன. சிறியவர்கள்- பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர். அங்கிருந்தவர்களில் அதிகமானோர் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து இருந்தனர்.
கியூபாவில் ஆங்கிலேய இசைக்குழு விழா நடத்துவது இதுதான் முதல்முறை. பாடகர் மிக் ஜாகர், பாடும் போது சிலர் மெய் மறந்து ரசித்ததை காணமுடிந்தது. உற்சாக மிகுதியில், மகிழ்ச்சி எல்லை கடந்து துள்ளி குதித்தனர். ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. சிலர் மிக் ஜாகருடன் இணைந்து பாடவும் ஆரம்பித்தனர்.
வரலாற்று நிகழ்வு

இதுகுறித்து ஸ்பானிஷ் மொழியில் கருத்து தெரிவித்த மிக் ஜாகர், ‘‘நாங்கள் அறிவோம், பல ஆண்டுகளுக்கு பின்னர் நீங்கள் இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கின்றனர். காலம் மாறி கொண்டிருக்கிறது. உண்மை தானா? இல்லையா?’’ என்றார்.
கியூபாவில் நடந்த இந்த இசை நிகழ்ச்சி ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும். ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன்னால், இசைநிகழ்ச்சிகள் கம்யூனிச சிந்தாந்தத்துக்கு எதிரானது என்று கருதப்பட்டு தண்டனைகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

———-

Leave a Reply